ஊரே பொங்கி பொங்கிப் பூரித்த திருமணம்
அக்காவுடையது

தொரா ஜோடித்து
மாப்பிள்ளையும் பொண்ணும் ஊர்வலம்
திண்னைப் பெருசுகள்
ட்யூப் வெளிச்சத்தில் பொருத்தம் தேட
அக்கா
பெருமிதத்தில் வியர்வை துடைத்தாள்

‘அவர மாலைய ஒழுங்கா போடச் சொல்லு’
எனத் தோழியிடம் கிசுகிசுக்கையில்
பிறந்த வீட்டை
ஒரு மட்டை போல் உதிர்த்திருக்கக்கூடும்
மனசு

தனியாக இருக்கும்போது
வளையல் சில்சில்லென்னும்
என்ன சொல்வாரோ மாமா
அடிக்கடி கிள்ளுவான்
கோபம் கொண்டு மூக்கு விடைப்பாள்

வழியனுப்பிய அம்மாவிடம் கூட
சடங்கிற்காக அழுது
பேருந்திலேறியவுடன்
மாமா தோளில் சாய்ந்து கொண்டாள்

ஊருக்கு வரும்போதெல்லாம்
மாமாவைப் பற்றியே பிரசங்கம்
காலையில் தொடங்கிய
அம்மாவின் ‘உம்’
பின்னிரவையும் தாண்டும்

புருஷனைத் திட்டுவதுபோலப் புகழ்வது
அக்காவிற்கு வாய்வந்த கலை

மாசமாகி வீட்டில் இருந்தபோது
சாம்பல் பூத்தமுகம்
மாமா வந்து போனால்
சிவப்பேறியிருக்கும்

எங்கு பிசகியதோ
அம்மா இறந்து கிடந்தபோது
ஊரெங்கும் ஒப்பாரி வைத்து ஓடிவந்தவள்
பிணத்தின்மீது விழுந்து
ராகம் போட்டு பாடினாள்
‘பாழுங்கெணத்துல தள்ளி’
பரிதவிக்கவிட்டுட்டு போயிட்டியே பாவி’
என்று


பச்சியப்பன்
Pin It