
தன் தரையெங்கும் கொடி பரப்பி
நடைபாதையோரம் பூக்களைச் சூடுகின்றன
மறுபுறம் நீலநீர் தெளிந்த பெரிய குளம்
இரவானால் நிலவையும் நட்சத்திரங்களையும்
போர்த்திக் கொண்டு உறங்காமல்
காற்றை இமைக்கின்றன
இப்பாதையெங்கிலும்
சாந்தம் மிக்க மாலைப்பொழுதொன்றில்
உன் கரங்கள் கோர்த்து நடந்திடும் வேட்கை
மனதின் இருப்புகள் தேக்கிவைத்து முணுமுணுக்கும்
ஓரினிய பாடலைப் போல
என்னுள்ளே உறைந்து கிடக்கிறது
நாம் நடக்கலாம்
மேகங்கள் சலனமற்று அசைவதைப் போல
நீர் மட்டம் தன்னுள் பாதங்களை ஏந்தி நகர்த்தும்
அந்த அன்னப்பறவைகள் போல
உன் கண்ணாடித் தொட்டி மீன்கள் போல
அந்தச் சாரலைப் போல தூறலைப்போல
இன்னும் என்னென்னவோ போல
நாம் நடக்கலாம் என்னோடு வா
- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை.