தனிமையின் விளிம்பில்
ஏகாந்தம் வாசித்திருந்த சமயம்

விரல்நுனிகளுரசி
வண்ணத்துப்பூச்சிகள் பறக்கவிட்டவளும்
கூந்தல் அவிழ்த்து காலத்தைப் புரளவிட்டவளும்
தானேயென்றவளை
ஏனோ எனக்கு சந்தேகிக்கத் தோன்றவில்லை
பலவான தேவதைக்கதைகள் பேசிக்களித்து
இசைப்பாடலுடன் கண்ணயர்ந்தபின்
நடந்தவையெல்லாம் கனவாகவே இருந்த பட்சத்தில்
கண்விழித்துப் பார்க்கிறேன்
எதிர்த்துருவத்தில் யாரோ ஒருவனுடன்
அளவளாகிக் கொண்டிருக்கிறாள்
கையிருக்கும் கனவின் மிச்சங்களை
நிழலைச் சுமந்து சூழும் உருவங்களில்
பொருத்தவியலா இந்நாளில்
என்னில் ஏகாந்தமும் இல்லை
கவிதைகளும் இல்லை..!
- கோகுலன் (gokulankannan@gmail.com )