எங்கு பார்த்தாலும் உன் பிம்பமே..
எதைக் கேட்டாலும் உன் குரலே..
எதைச் செய்தாலும் உன் நினைவே..
எது பேசினாலும் உனைப் பற்றியே..
எந்த நுகர்விலும் உன் வாசமே..
ஐம்புலன்களும் அடங்காமல்
உன்னைச் சுற்றி..
அடக்கும் வழி தெரியாமல்
அல்லாடுகிறேன்..
அத்தனையையும்
நிறுத்திக் கொள்ள
நீ நேசிப்பதைத் தவிர
வேறு வழியேயில்லை..
-------------------------------
வயல்வெளியினூடே
எதற்கும் அஞ்சாது நிற்கும்
வைக்கோல் பொம்மையினை
கண்டு பயந்து போகும்
பறவைகளைப் போலானதல்ல..
பின்வாங்க மறுக்கும் நேசம்..
------------------------------
நமக்கிடையே
ஒன்றுமில்லை..
அதீத நேசம்
அளவிலா அன்பு
அடங்காத மகிழ்ச்சி
அடம்பிடிக்கும் இதயம்
ஈர்ப்பான பார்வை
இப்படி
நமக்கிடையே ஒன்றும் இல்லை..
நமக்கான இடைவெளிகளில்
நம்மைத் தவிரவும் யாருமில்லை..
------------------
மிச்சமிருந்த
மரணம் பற்றிய பயத்தை
விட்டொழித்தேன்..
அறிமுகமற்ற
வாழ்வு பற்றிய
ரகசியத்தை
அறிந்து கொண்டேன்..
இரண்டும்
உன் மனதிலிருந்து
துண்டித்து வீசப்பட்ட
வார்த்தைகளின்
ஒப்பிடமுடியாத
வீரத்திற்கான வெளிப்பாடு..
----------------------------------
ஒரு குழந்தையைப் போல
விளையாட விடு..
அல்லது
ஒரு பறவையைப் போல
பறக்க விடு..
அல்லது
ஒரு கவிதையைப் போல
வாழவிடு..
அல்லது
உன் நேசத்தையாவது
சொல்லிவிடு..
- இசை பிரியா (