கீற்றில் தேட...

1)
ஷெல் சப்தங்களின்
உக்கிரங்களுக்கும்
உஷ்ணங'களுக'கும் நடுவே
எழுதிக்கொண்டேயிருக்கிறேன்
உனக்காக ஒரு காதல்கடிதம்...

இம்மடல் உன் கரம்
சேரும் தறுவாயில்
எனது உயிர் எனக்குச்சொந்தமற்றுப்போகலாம்
அல்லது
உனது உயிர் உனக்குச்சொந்தமற்றுப்போகலாம்..

சுவாசிக்கக்கூட சுதந்திரமற்ற
உலகில்
நமக்கான உதய சூரியன் அஸ்தமித்ததே கிழக்கில்தானே...?

இற்றுப்போன கனவுகள் பற்றியோ
துருப்பிடித்த நமது முத்தங்கள் பற்றியோ
பரிமாறிய மௌன வார்த்தைகளின்
ஏகாந்த வலிகள் பற்றியோ
வாழவே நிராதரவற்ற நிர்ப்பந்தத்தில்
எப்படி மனக்கண்ணில் நிறுத்தி வைத்திருப்பேன்..??

உன் எழில் முகம்
கனவில் விரியும்போதெல்லாம்
காது கிழிக்கும் வன்முறைச்சப்தங்கள்
எனது தூக்கத்தையும் துளியூண்டு நிம்மதியையும்
துகள் துகளாய் தூர்த்தெறியும்..

இருள் சூழ்ந்த வாழ்க்கை
பேயறையும் தனிமை
உணர்வு தின்னும் வலி
உருக்குலைந்த நிம்மதி
இன்னும்
இன்னும்
இன்னும்
வேறெதனை மடல் வழியே உனக்குரைப்பேன்...?

படுகொலை செய்யப்பட்ட
இருத்தலின் நீட்சி குறித்து
நீயும்
எதனையும் தர்க்கிக்க வேண்டாம்..

நிர்க்கதியான வினாடிகளின்
கானல் நம்பிக்கையில்
உனக்கான என் காதல் கடிதம் எழுதி முடிக்கப்பட்டாயிற்று

இப்போதுதான் அந்தக்கேள்வி எனக்குள் எழுகிறது..
இதை
எந்த முகவரிக்கு அஞ்சலிடுவது?
இப்போது நீ எங்கிருக்கிறாய்..?
ஏலவே எழுதப்பட்ட காதல் மடல்களின்
குப்பைக்கூடையில் இதுவும் சேரப்போகிறதோ...??
உன் கரம் கிட்டாமலே........