தொடர்புடைய படைப்புகள்

shakespeare 400கவிதைச் சூழல்

அவனோ பெண்கள் வியக்கும் ஆணழகன், திருமணத்தில் நாட்டமில்லாதவன், இன்னும் திருமணம் ஆகாமல் காலம் கடத்துபவன், கவிஞருக்கு ஆத்மார்த்தமான சிநேகிதன். அவன் பேரழகைக் காலம் தின்றுவிடும். காலம் தின்றுவிட்டால் கதை முடிந்துவிடும். பேரழகிற்கு ஒரு வாரிசு இல்லாமல் போனால் இந்த உலகத்தில் அவன் தடயமே அழிந்து விடும். இதனை எண்ணி ஆதங்கப்பட்ட கவிஞர், அவனைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி எழுதப்பட்ட கவிதைதான் இது. ஒரு சாதாரணச் சூழல்தான் இந்தக் கவிதைக்கான களம் என்றாலும், ஷேக்ஸ்பியர் என்னும் மகா கலைஞனின் கைவண்ணத்தில் இந்தக் கவிதை எப்படி அமரத்துவம் பெற்ற ஓர் ஓவியமாகி விடுகிறது பாருங்கள்.

சானட் 60: அழகிய இளைஞனே! (The "Fair Youth")

கூழாங்கற்கள் குவிந்துகிடக்கும் கரைதனை முத்தமிட
அடுக்கடுக்காக வந்து மடியும் அலைகளைப் போல
நம் வாழ்வின் மணித்துளிகள் சீராக விரைகின்றன
இறுதிக் கணத்தை நோக்கி.
எழுவதும் மடிவதும் இயற்கையில் என்றும்
அலகிலா விளையாட்டோ!

முழு ஒளியில் கடலில் பிறக்கும் இளஞ்சூரியன்
தத்தித் தவழ்ந்து விண்ணின் உச்சிக்குச் சென்று
தனக்கு முடிசூட்டிக்கொள்கிறான்.
ஆனாலும், அவனின் பொலிவைக் குலைக்கும்
இந்த அவலக் கிரகணங்கள் ஒளியைத் தின்று
அவன் பேரெழிலைக் காவுகொள்கின்றன.

ஓ, சாவிற்கு உணவு தரும் இந்தக் கொடிய காலம்!
செழித்திருக்கும் இளமையின்
இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சுகிறது;
அழகின் சருமங்களில் சுருக்கங்களைத் தோண்டுகிறது.
இரக்கமற்ற இதன் கரங்களில் முளைத்திருக்கும்
அரிவாளுக்கு இரையாகாத ஒரு ஜீவன்
இந்த உலகத்தில்தான் உண்டோ?

ஆனாலும், என் பிரிய இளைஞனே!
உன் பேரெழிலை அழியாமல் அடைகாக்க
ஒரே ஓர் இடம்தான் உள்ளது.
அவ்விடத்தில் மட்டுமே காலத்தின் கரங்கள்
உட்புகுந்து உன் அழகினைத் தீண்டாது.
அவ்விடத்தில்தான் அமரத்துவம் பிறக்கிறது.
ஆம், அந்த இடமே என் கவிதையாகும்;
என்றென்றும் உயிர்த்திருக்கும் என் கவிதையாகும்.

மூலம்: ஷேக்ஸ்பியர்

மொழிபெயர்ப்பு: தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.