தம் மீது
விழப் போகிற
எறிகுண்டுகளைப் பார்த்து
அந்தக் குழந்தைகள்
என்ன நினைத்திருப்பார்கள்?
யாரோ பந்துகளை வீசி
விளையாடுகிறார்கள் என்றா...?

அவர்களுக்குத் தெரியுமா..
கடவுளை மதமாக்கி,
மதத்தை வெறியாக்கிய
மூளைகளின் அடங்காப் பசியிலிருந்து
பிறந்தவை அவை என்று?

கிழிந்து போய்
கிடக்கும்
பாதிப்பந்தின் விரிசலில்
எந்தக் குழந்தையின்
கைரேகையின் மீதோ
வெடிகுண்டுப் புகையின்
கருமை படர்ந்திருக்கிறது...

பாதங்கள்
தழுவித் தீர்த்த
முற்றங்களில்
அவர்களின்
உதிரி பாகங்கள்
மூடி வைக்கப்பட்டுள்ளன.

எந்தெந்தக் குழந்தையின்
கனவுகளிலிருந்தோ
கட்டி எழுப்பப்பட்ட வீடுகள்
தகர்ந்து போய்க் கிடக்கின்றன...

யாரோ மாற்ற முயலும்
வரைபடங்களின்
கோடுகளுக்காக...
மனிதர்கள் உடல்களாகி,
வெறும் எண்களாகி விடுகிறார்கள்...

மனிதர்களுக்கும் எண்களுக்குமான
இடைவெளியை வெறுப்பு
நிறைத்து விடுகிறது..

உங்களுக்கும் ஒரு எண்
காலியாக விடப்பட்டுள்ளது...
வெறுப்பைச் சுமந்து கொண்டு
சீக்கிரம் வந்து சேருங்கள்...

- அ.உமர் பாரூக்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.