கற்றல்
நின்று போன
மனது
கதவுகள் சாத்தப்பட்ட
அறைக்குள் சிக்கியதைப் போல,
மூச்சுத் திணறுகிறது...
கடந்த கால
கரும்புகைக்குள்
உயிர் மூச்சு
ஒளிந்திருப்பதாக நம்பி,
அங்கேயே
அமர்ந்திருக்கிறது.
பயணம் தொலைக்கும்
நீர்தான்
சாக்கடையாகிறது..
நகர மறுக்கும்
அறிவில்
காளான்கள் போல
கர்வம் பூக்கிறது.
சாவி
கையிலிருந்தாலும்
திறக்க மறுக்கும்
துருப்பிடித்த
பூட்டைப் போல,
இயக்கம் நின்ற அனைத்தும்
ஓட்டத்திலிருந்து
தம்மை துண்டித்துக் கொள்கின்றன.
காலமெனும்
கரும்பலகையில்
எழுதுவதற்குத் தேவை
உயிர்ப்புள்ள
ஓர்
உயிர்.
- அ.உமர் பாரூக்