1. அழைப்பு
நீ ஏன் அழைக்கிறாய்?
நான் அழுது கொண்டிருக்கிறேன்
நீ ஏன் அழைக்கிறாய்?
நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன்
நீ ஏன் என்னை அழைக்கிறாய்?
நான் ஏதும் இல்லாதிருக்கிறேன்
நீ ஏன் என்னை அழைக்கிறாய்?
நான் நிரம்பியிருக்கிறேன்
அழைக்கும் போது
எடுப்பேன் உன்னை.
2. படிந்திருக்கும் காசு
கழிவறைக்குள் விழுந்த காசை அவன்
கைவிட்டு எடுத்த பொழுது
யாரும் இல்லை
அது யாருக்கும் தெரியாது
கடைசி வரை அதை யாரிடமும்
சொல்லவே இல்லை
அவனோடு செல்லப் போகிறது
தலைமுறை கடந்து உள்ளே
படிந்திருக்கும் காசு.
3. எழுத்து
எழுத ஒன்றுமில்லாமல் போய்விடுகிற இரவு
அவ்வளவு துன்பமாக இருக்கிறது
எழுத ஒன்றுமில்லாமல் போய்விடுகிற பகல்
அவ்வளவு இன்பமாக இருக்கிறது
துன்பத்தில் எழுத முடியாது
இன்பம் எழுத விடாது
இன்பமும் துன்பமும் மாறி மாறி
எழுதிக்கொள்கிற வாழ்வில்
என்னைப் பற்றி நீயோ நானோ மற்றவரோ
என்ன இருந்துவிடப் போகிறது
எழுதி வைப்பதற்கு.
எழுதாத பொழுதும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்.
எழுதுகிற பொழுது
எழுதாமல் இருக்கிறேன்.
நீதான் எனக்கு எல்லாம்
தரவேண்டும் அம்மையே
4. அது அப்படியாகி விட்டது
பங்காளியிடம் நான்
கைமாற்று கேட்டபோது
அதற்கு அவ்வளவு கோபம்,
அது என் தாய் மாமன்;
பாதி தாய்.
ஒரு மிடறு மலிவுச் சாராயத்தின் வேகம்
மிகவும் கூர்மையானது
அது அறியாதது.
அதே வீட்டின் நிலப்படியில்
நடுங்கும் கரங்களோடு இப்போது அது
நிற்கிறது.
என்னை ஓங்கிய அதே விரல்கள்
ஒரு ‘கட்டிங்’ மதுவுக்காக
தவிப்புடன் நீள்கின்றன
வருவோர் போவோரிடம்.
மதுக்கடை வாசலின்
எச்சில் இலைகளுக்கிடையே அது
மஞ்சள் வாந்தி எடுக்கிறது
உதிர்ந்து கிடக்கிறது ஊரெங்கும்
அது சேமித்த மொத்த மரியாதை.
இந்த போதை
மகானையும் மடையனையும்
ஒரே சாக்கடை ஓரத்தின் இருளில்
சமமாகப் படுக்க வைத்து வேடிக்கை பார்க்கிறது.
அதனிடம் போய் அது சிக்கிவிட்டது.
ஒரு மதிய வேளையில்,
வண்ணப்படங்களின்
ஆரவாரங்களுக்கு அருகே
அஞ்சலிச் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.
பலர் சேர்ந்து
அதன் விரல்களால் அதற்கு
அதை ஒட்டியிருந்தார்கள்.
அங்கே ஓர் இளைஞர்
தன் பாட்டிலை வேகமாகத்
திறந்து கொண்டிருக்கிறான்.
அதே தெரு ஒரே தெரு
அது அதை
மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
5. வீடு
முற்றத்தில் தனித்துக் கிடக்கிறது
பின்னல் அறுந்த
பழைய சாய்வு நாற்காலி.
உதிர்ந்த வேப்பிலைகள் மூடிக்கிடக்கும்
யாரும் கூட்டாத திண்ணைகள்.
சுண்ணாம்பு பெயர்ந்த சுவர்களில்
அப்போது வரைந்த கைச் சின்னம்.
காய்ந்து போன துளசி மாடம்,
தூசு படிந்த ஜன்னல்.
கருப்பு வெள்ளை புகைப்படங்களில்
கோட்டுச் சூட்டு ஆண்,
கன்னத்தில் கண்மையிட்ட பெண்.
இன்னும் சில படங்கள் இருளில்
உள்ளே இருக்கின்றன.
பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது
எப்பொழுதாவது யாராவது வருகிறார்கள்,
பிறகு மீண்டும் பழைய பூட்டு.
எங்கே போனாலும்
எந்தத் திசையில் இருந்தாலும்
எவ்வளவு வெயில் அடித்தாலும்
ஓடி வந்து அதன் காலடியில்
படுத்துக் கொள்கிறது
அந்தக் கிழட்டு நாட்டு நாய்.
கொள்ளையடிக்கக்
கொலைகள் விழுந்த
வேப்பமரத்து நிழல் படரும்
அவ்வீட்டில் அப்பொழுது நண்பகல்.
6. பழைய சைக்கிள்
அந்தக் கிராமத்தில்
விட்டுச்செல்லப்பட்ட
திண்ணை வீடொன்றின்
சுவரில் சாய்ந்து நிற்கிறது,
ஒரு பழைய சைக்கிள்.
பின்னிருக்கையில்
தீர்ந்துபோன ஐஸ் பெட்டி.
உருண்டோடிய அதன் சக்கரங்கள்
இப்பொழுது ஓய்வில் இருக்கின்றன,
அதனுள் இன்னும்
தணிந்தபடி இருக்கின்றன
பகலின் அதிர்வுகள்.
பரோட்டா வாங்கிக்கொண்டு
அவ்வழியே செல்லும் சிறுவன் ஒருவன்,
அதன் காற்று ஒலிப்பானை
ஒரு முறை அமுக்கிவிட்டு
ஏனோ அவ்வளவு வேகமாக
இருளில் ஓடி மறைகிறான்.
7. ஜனநாயக அரசியல்
ஈரப் பாறையில் துணி கசக்கும்
மூதாட்டியின் மணிக்கட்டிலிருந்து நழுவி
நீரில் மூழ்குகிறது,
அந்த ஒற்றை வளையல்.
கரையோரத் தவிப்பின் முன்
நீர்ச்சுழலின் மையத்திலிருந்து
எழுந்து வருகிறாள்
எட்டாம் மாதத்தில் இறந்த மகள்.
பருவமடைந்த குமரியாகி
வளையலைக் கையில் அணிந்தபடி
மேலெழுந்து
மீண்டும் சுழலிலேயே அடங்குகிறாள்.
காலாகாலமாக
உறைந்த இக்கதையைச்
சொல்லும்போதெல்லாம் துளிர்க்கிறது
ஒரு சொட்டுக் கண்ணீர்
அந்த மூதாட்டிக்கு.
இப்போது அந்த மூதாட்டி
ஒரு வாக்கு.
அவளிடம் அதே கதை இருக்கிறது,
வாக்குச்சீட்டில்
அதை எழுதியும் வைத்திருக்கிறாள்.
★
எஞ்சியிருப்பதெல்லாம்
ஒரே ஒரு பெருமூச்சு.
பகலுக்கும் இரவுக்கும் இடையில்
விழுவது திண்ணம்.
தாங்கிக் கொள்ளக் காத்திருக்கிறது
பிரபஞ்ச அமைதி
- சீனு ராமசாமி