கர்ப்பக் கிரகத்துக்குள்
கலவி புரிந்தார்கள்
சாமி வரவில்லை
கோவிலுக்குள்ளே வைத்து
நாசம் செய்தார்கள்
சாமி வரவில்லை
கற்பழித்து இறந்த உடலை
கோவில் வளாகத்திற்குள்ளயே
புதைத்தார்கள்
அப்போதும் கூட
சாமி வரவில்லை
செவ்வாய் வெள்ளியென
கோவிலைச் சுற்றும்
இளம் பெண்களும்
இரவுப் பொழுதில்
தனிமையில்
சென்று வருகையில்
வன்புணர்வு செய்யப்பட்டார்கள்
அப்போதும் அவர்களுக்காக
சாமி வரவேயில்லை
இவற்றிற்கெல்லாம்
வராத சாமியா
பூஜை புனஸ்காரம் செய்து
மேள தாள சத்தங்கள்
கேட்டதும்
வந்து விடுகிறது.
***
வெளியூர் வேலைக்கு
சென்றிருந்தேன்
சிலபேர் என்னிடம்
எந்த மாவட்டம் என்றார்கள்
கூறினேன்
எந்த ஊரென்றார்கள்
கிராமமென்பதால்
அருகிலிருக்கும்
ஊர் பெயரைக் கூறினேன்
அந்த ஊர் தானா ?
இல்லை வேறெதும் ஊரா
என்றார்கள்
எனது ஊர் பெயரைக் கூறினேன்
அந்த ஊரில் எந்த தெரு
என்றார்கள்
அதற்கும் பதிலளித்தேன்
இப்போது ஓரளவு
தெரிந்திருக்கும் அவர்களுக்கு
நான் யாரென்று !
அதை உறுதி
செய்து கொள்ள
மீண்டுமொரு கேள்வி
ஒருவரின் பெயரை உச்சரித்து
அவரை உனக்குத் தெரியுமா
என்றார்கள்
ஆமாம் என்று பதிலுரைத்தேன்
அவர் உனக்கு என்ன
வேண்டுமென்றார்கள்
அவரை எனக்குத் தெரியுமென்றே
விடை கூறினேன்
இப்போது அவர்களுக்கு
உறுதியாக தெரிந்திருக்கும்
நான் யாரென்றும்
என்ன சாதியென்றும்...
- கண்ணன்.க