கீற்றில் தேட...

மொட்டை மரம்
துளிர்க்கத் தொடங்கி விட்டது
முதல் மூச்சு எந்தப் பறவைக்கு

*
ஊர்க்கோடி கிறுக்கன்
ஒரு காலத்து கலைஞன்
மேடை மயானம் ஆனது எப்படி

*
கண்கட்டு வித்தையா
கரும்பச்சை பாம்பென
இந் நதி

*
காசு இருந்தால் போடு
கருணை போட்டு
துச்சமாக்காதே

*
சிலுவைகளின் எதிரொலியை
காட்சியாக்க எப்படி யோசித்தேன்
சிலுவை செய்து தீரவில்லை இந்நாள்

*
கூட நடக்க நீ இருக்கிறாய்
பிறகென்ன
பிரிய மழையே வா

*
மஞ்சள் வெயில் தீரப் போகிறது
ஊதா இருள்
பிகில் அடிக்கிறது

*
குடையற்றவனிடம்
பாய்ந்தோடி வரும்
துளி புலிகள்

*
கடவுளாகிவிட முடிவெடுத்தேன்
எத்தனை சிற்பிகள் உடனே
உளிகளோடு

*
பட்ட மரமாகினும்
உறவாட மறுப்பதில்லை
பறவைகள்

- கவிஜி