வசப்படாத வானமான வாழ்வின்
சூத்திரம் தெளியாத தேர்வாக,
கனவாகக் கரையும் நாட்களின்
ஆசை ஆசையான ஏக்கங்களில்
உடமைச் சமூகத்தின் ரோகம் தீர
விஷமே மருந்தாகும் விபரீதமாய் -
இயலாததை சாகஸமாக்கும் நிழல்களில்
மூழ்கித் திளைக்கும் போதையில்
சமூகப் பொதுவெளியின் முகமூடிகளாய்
பண்பும் அறனுமென அனைத்தும் -
கட்டுண்ட காமமும் மூர்க்கமும்
மனக் குகைக்குள் புதைந்து புகைய,
ஏமாற்றப்பட்ட ஏகலைவன்கள் நடுவே
சவமான சம்புவன்களின் சங்காரத்தில் –
அலங்கரிக்கப்பட்ட ராமனும் லட்சுமணனுமாய்
தொடர்ந்த நாயக பிம்பங்களின் சரிதத்தில்...
வணிகமான கலைவடிவம் வார்த்தெடுக்கும்
வசீகர பிம்பங்களில் பிறழ்ந்து -
அரசியலின் நிஜம் எதுவென்ற
அரிச்சுவடி அழிக்கும் நிழல்களில் நெகிழ்ந்து -
நிழலில் அணியணியாய்த் திரளும்
எதிரிகளை அடித்துத் துவைத்த –
நிஜத்தில் நிகழ்த்திய தாண்டவத்தில்
தலைதெறிக்க தப்பியோடிய தற்குறிக்காய்
தணிய மறுக்கும் தழலாய்
தமிழ்மண்ணின் தலைகுனிவாய்...
இரத்தமும் சதையுமாய்ச் சிதைந்து
நாயக மோகத்தில் நடுவீதியில் நசிந்த விபரீதம்
- வல்லபாய்