ஒழுங்கற்று ஓடியது
பாதரசப் பொய்கள்
பளிச்சென மனதிலேறி
ஒவ்வொருவரிடமும்
நியாயமென பதிந்து.
கேட்பாரற்றுக் கிடந்தது.
தொன்மங்கள் உண்மையோடு
உறங்கி தொடுதலற்று
தூசுகளேறி பழுப்பாகி.
பாரிய விவாதங்களுக்கு
பஞ்சமில்லை,
பயங்கரவாதியா தீவிரவாதியாவெனும்
பாதககங்களுக்கு சிரங்கை உரித்து
சீழ் குடித்து
அண்டிப் பிழைக்கும்
அடிமை ஊடகங்களுக்கு.
ஆறாக ஓடுகிறது
அவல ஓலம்
அபகரித்தவனிடம்
அகப்பட்டவர்களின்
குருதியோடு
குடிகளனைத்தும் சிதிலமாகி.
நித்திரை கலைகிறது
நியாயமில்லை
நியாயமில்லையெனும்
சிறுமியின் குரல்
குண்டு மழையின்
கேவலுக்கிடையில்
அனுதாபப் பொய்யொன்றை சிந்தி
அயோக்கியனில்லையெனக் காட்டுவதற்கு.
பேனா இருக்கிறது
பிறர் விரும்பும் மையை
நிரப்பி எழுதுமாறு.
வாள் பிடிக்கத் தயங்கும்
நான்
வரலாற்றுப் பிழையை
வேடிக்கை பார்க்கும்
வாழ்க்கையை நொந்து.
- ரவி அல்லது