தன் இருப்பை பறைசாற்றும்
இருளின் ராஜ்ஜியத்தில்
உன் கண்கள்
பச்சையத்தை உமிழ்கின்றன
திரவம் போல
எனக்குள் பாயும் அது
அசைவற்றுப் போக
என்னை வசீகரிக்கிறது
மானை கவ்விப் போகும்
சிறுத்தையைப் போல
என்னை கவ்விப் போகிறது
உன் பார்வை
பற்களில் தோன்றும்
சிவப்புத் தீற்றல்
நாவில் ருசிக்க
ஒரு மிடறு குடிக்கிறாய்
பிறகு நிறுத்தவேயில்லை
காலத்தின் மீது கிடத்தப்பட்ட
உடலை வெறித்தபடி
இரையாகிக் கொண்டிருக்கும் எனக்கு
முழு விழிப்புணர்வுடன் இருப்பதே
சகிக்கவொண்ணாததாகிறது
உன் அண்மையில் நான் மட்டும்
ஏன் விலங்காக முடிவதில்லை என்பது
தீராத ஆச்சரியமாகிக் கொண்டே போகிறது
- தங்கேஸ்