கீற்றில் தேட...

பச்சை முயலாக குதித்தோடும்
அதிகாலை நதியை
விழிகளை விரித்துப் பார் சகியே

இதே நதியை
மீண்டும் தரிசிக்க
எத்தனை கல்ப யுகம்
காத்திருக்க வேண்டுமோ?

ஒரு வேளை
இந்தப் பிரபஞ்சம் மடிந்து
மீண்டும் தோன்றி
இத்தனை ஆயிரம் வருடங்கள்
கடந்திருக்க வேண்டியதிருக்கலாம்

இது போல் ஒரு நீர்ப் பூச்சி வந்து
நதிப் படுகை மீது ஒளி ஓவியம்
தீட்டிக் கொண்டிருக்க
வேண்டியதிருக்கலாம்

பார்வைக்கு சருகு போல்
தோற்றம் தரும் பட்டாம் பூச்சி
அமர்ந்த நிலையிலேயே
பிரேதமாக மிதந்து
வர வேண்டியதிருக்கலாம்

கை விடப்பட்ட
ஆயிரமாயிரம் இதயங்கள்
ஒரே நேரத்தில் இதில்
அடித்து செல்லப்பட
வேண்டியதிருக்கலாம்

அதை விட நீயும் நானும் இப்படி
பிணைந்திருக்கும் கைகளை விடுவித்துவிட்டு
எதிரெதிர் திசையில் நதிக்கரையில்
நடந்து போய்க் கொண்டிருக்க
வேண்டியதிருக்கலாம்

- தங்கேஸ்