கீற்றில் தேட...

எழுந்து விட்ட மனம்
எழவிடாமல்
உடலைப் படுக்கையில்
கட்டிப் போட்டு வைத்திருக்கிறது
சோர்வெனும் அலுப்பில்.

பாங்கொலியும்
பறவைகளின் சத்தமும்
சமீபமாக்கி விட்டது
இருள் விலகி
விடியலாகப் போவதை.

திறக்க வேண்டிய மெஸ்
செயல்பட வைக்கிறதொருவரை
இன்றைய நாளின்
எதிர்பார்ப்பில்.

கறிகடைக்காரர்
காலை நேரத்திற்குள்
செய்ய வேண்டிய வியாபாரத்தை
கால தாமதாக்கிவிட முடியாது
விரும்பாத நோவானாலும்.

சுபுஹூ தொழப்
போக வேண்டியதாக உள்ளது
ஜமாத் பொறுப்பிலிருப்பிலிருக்கும்
நகைக் கடைப்பாய்க்கு
நற்செயலாக.

எல்லாவற்றிற்கும் பதில்
சொல்லிப் பழகிய மனம்
மௌனித்திருக்கிறது
அழைத்துவிட எதுவுமற்ற
அதிகாலையை நினைத்து
அலுப்பாக.

அய்யா இருந்தால்
அழைத்திருக்கலாம்
தண்ணீர் காட்டும்
வண்டி மாடுகளுக்கு
கையை விட்டு தவிடு கலப்பதால்
வெத்தலையை
கசக்கிக் கொடென.

அம்மா இருந்தால்
முதுகு சொறிய கூப்பிட்டிருக்கலாம்
பாத்திரம் கழுவும்பொழுதில்
எரிந்த சாம்பல்
கையெங்கும் இருக்கிறதென.

மென் சோகம்
தாங்கிக் கிடத்தி
வைத்திருக்கும்
இயலிருப்பே
என்ன செய்வதாக
உத்தேசம்
இந்த கணத்தை
அல்லது
இன்றைய நாளை.

- ரவி அல்லது