கீற்றில் தேட...

இருள் போர்த்தி
மயங்கும் போழ்து
உண்டு செரித்த
கவிப் பிணம்
ஊர்திவிட்டு கழன்று
குருதியில் பாய்கிறது

நெடுஞ்சாமம் ஊறி
சொல் பிரிந்து
விடியலில்
ஒவ்வாமைப் பிரகடனம்

தடித்து வீங்கிய
சொற்குவியல்
ஒவ்வொன்றாய்
சீல் வழிய
துடைத்துவிட்டு அகலும்
இலக்கண தேகத்தில்
சர்ப்பப் பாய்ச்சல்!

2. நிலம் கோர்த்த முகங்கள்!

கதிர் போர்த்திய
நிலம் என்னை
வா என்றது

நெடுநீர் பொய்த்த
தடத்தில்
வா என்றதும்
வரிந்து கொண்டு
இறங்கினேன்

கூர் தைக்கும்
கரிசல் வழியில்
குருதி படிந்த
பாட்டன் முகம்

சட்டென பின்வைத்த
கால்களை
இறுகப் பற்றியது
அம்முகம்

வாரி எடுத்து
நிலத்தில் தேய்க்க
நிலம் சிரித்தது
ஆரோகணத்தில்
குருதி பெருகி
நிலம் முழுதும்
பெருவெள்ளம்

இம்முறை
மார்பு வரையில்
குருதி தோய்ந்த
முகங்கள்

ஈரம் வடியாத
கனத்த உதறலில்
கிரியப் பத்திரம்
பாட்டன் முகமாய்
கசிந்திருந்தது!

3. இறகின் பேதம்!

காஸ்மோசில்
கூடுகளை வேயும்
பறவைகள்
இருள் கூடும்
பின்னிரவில்
பொய்த் தோற்ற
இறகை அசைக்கும்

வெளி வானில்
அவிழும்
அசைவுகளைக் கோர்த்து
ஆதி அணுக்கள்
நர்த்தனம் புரியும்

மேலும் அவிழும்
அசைவுறும்
இடைநிற்கும்

மெல்ல மெல்ல
நிலம் சேரும்
இறகுக்கு
மற்றுமொரு பறவையின்
பொய்த்தோற்ற
பிம்பம்!

- ராஜேஷ்வர், சென்னை