கீற்றில் தேட...

1.

உன்னிடம் மட்டும்
தோற்கும் வரத்தை,
அன்பே, எனக்களி!
எல்லோரையும்
வென்று வருவேன்!

---

2.

அவர்களை
வேறு யாருக்கும்
பிடிப்பதில்லை;
அதனால் அவர்களுக்கு
பைத்தியம் பிடிக்கிறது.

அவர்களுக்கும்
பைத்தியம் பிடித்திருக்கின்றது.
எனவே, சிரித்தவாறே,
எப்போதைவிடவும்,
எவரை விடவும்,
அமைதியாய் இருக்கின்றார்கள்.

பொறாமையில்
அவர்கள் மீது
கற்களையோ,
சொற்களையோ,
எறியாதிருப்பீராக!

---

3.

நாமாக
வரவழைத்துக் கொள்பவை,
தாமாக
நமக்கென்று வருபவை—
எல்லாக் குழப்பங்களும்
நொடியில் தீர்ந்து,
தொலைந்து போகின்றன,

தெருமுக்கில் வீற்றிருக்கும் கடவுளைவிடவும்,
வீதியில் வீசப்பட்டிருக்கும்
மனம் பிறழ்ந்தவளைத் தரிசிக்கும் கணத்தில்.

என்றாவது ஒரு நாள்,
ஒரு கண்ணாடியை முன்னே நீட்டி,
ஊரையே தெளிவாக்கும்
அவளைக் குணப்படுத்தலாமே!

அவள்தான் முற்றிய கணத்தில்
முழுதாய்த் தெளிந்தவள் அன்றோ?
கடவுளுக்குப் போய்,
எந்தக் கடவுள் தேவைப்படுகிறார்?

---

 4.

அசோகர் சாலையின்
ஓரங்களில் ஏன்
போதிமரங்களை நடவில்லை?

- அ.சீனிவாசன்