கீற்றில் தேட...

இயலாமையில்
கனன்று கொண்டிருந்த
நேசத்தை
அதிகாரம்
அட்சப் பாடுகளில்
கைவல்யப்
படுத்திக் கொண்டிருந்தது
கைக்கெட்டும்
தூர வெற்றியை
மேதகு மேன்மையின்
சாத்தியத்தைக் கொன்று.

அக்கரை நீரில்
பதத்துப்போன
எழுச்சியைப்
பற்ற வைத்த
தீக்குச்சிக் கருகித்தான் போனது
தாகித்த தற்கொலையில்
ததும்பும் தணல் பரப்பி.

பற்றி எரிந்த
பிரவாக ஜ்வாலையில்
தீக்காடாயானது
திசைகளெட்டும்.
வழக்கம் போலவே
குளிர் காய்ந்து
கொய்யும் அறுவடையாக
சுய நலமிகளால்.

யாவும் முடிந்து போனதான
ஆசுவாச அபகரிப்பின்
தருணத்தில்
சோரத் தளர்வை
சுடர்விட்டு எரிக்க
எங்கு தேடுவது
கந்தகம் சுமக்கும்
குமாரனை
காத்திரக் கூடலாக்க
இப்பொழுது.

கொளுத்திக் கொண்ட
கொடூரப் பற்றலில்
சூழ்ச்சிக் காடழித்து
பாதகப் பகைக்குள் மூழ்கி
முத்தெடுத்து
மாலையாக்கி
ஈழத் தாய்க்கு
எப்பொழுது போடுவது
சுதந்திர சுவாசமற்று
மூர்ச்சையாகி
முனகிக் கிடக்கும்
அநாமதேய
அவலப் பாடில்.

- ரவி அல்லது

நன்றி:
முத்துக்குமாருக்காக தோழர் பாலாகியின் வேண்டலுக்கு.