பாசிச ஓநாய்களுடன்
பயணித்து பாதையமைத்து
வென்று கொண்டிருக்கும்
வேலையில்
கடந்த தூரம் அநேகம்
கைவரப் பெற்றதும் அநேகம்.
ஒன்றும் செய்யவியலாத ஓநாய்கள்
வனத்திற்குள் வாகாய்
சிக்கிய நரியொன்றை
நாப்பயிற்சி கொடுத்து
ஊளையிட வைத்தது
தன்மானம் பொங்க
ஓநாய்களையும்
விமர்சித்து தம்பிகள்
ஒன்றாகக் கூட
அறிவு ஊளையில்
ஆச்சரியமடைந்தவைகள்
அசௌகரியம் கொள்ள
ஊளையிட உரிமை வாங்கிக்
கொடுத்தவர்களையே
குதறி விட்டது
பயிற்சி கொடுத்த
ஓநாய்களின் பாதகமான
வழிகாட்டலால்.
பாசிச பச்சோந்திகளின்
படியெடுக்கும் பாதகத்தை
அடியோடு அழித்த கூட்டம்
வனமெங்கும்
கிளர்ந்தபொழுது
ஊளையிட்ட நரி
ஒண்டிக்கொண்டு
ஆமை பிரியாணியை
அசை போட்டுக் கொண்டிருந்தது
அடுத்து
ஊளையிடத் தயாராக.
வியூக வலையில்
விழுந்திடாதவைகள்
அடுத்த தலைமுறைக்கு
அழகாகப் புரிய வைத்தது
பாசிச ஓநாய்கள்
இதுபோல்
பலவாறு வரும்
பார்த்துக் கொள்ளுங்களென
பயணிக்கும் தூரம்
தொலைவெனச் சொல்லி.
ஆச்சரியமடைந்து ஆர்ப்பரித்த
அடுத்த தலைமுறைகள்
கேட்டது
ஊளையிடும்
நரியைப் பற்றி
ஒன்றும் சொல்லவில்லையென
ஊற்றெடுக்கும் கொதிப்புகள்
அடக்கி.
ஓநாய்கள் கூட்டம்
ஒரு நாள் வேறொரு
வியூகம் அமைக்க
கிளம்பும்போது
நட்டாற்றில்
சிக்கிய நரி
கால ஓட்டத்தில்
காணாமல் போகும்
கம்பூன்றிய கிழவனின்
கடை மயிரைக்கூட
புடுங்க முடியாமல்
நன்றி கெட்டது
நாதியத்து சாகுமென்பதை
உறுதிகள் செய்தென
சொன்ன பொழுது
புரிவது கொஞ்சம்
சிரமமாகத்தான் இருந்தது
வென்று கொடுத்தவைகளின்
ஆசுவாசத்திலும்
ஊளையிடும் நரியை
உதைக்க முடியாத
புதிய தலைமுறைகளுக்கு
பொங்கும் கோபத்தை
அடக்குவதும் அறமென
புரிய முயன்று.
- ரவி அல்லது