அறத்தைச் செரிக்க வைத்துவிடும்
ஆட்டோக்காரர்கள்
வந்து வந்து
கருணையை
உரசிவிட்டுத்தான் சென்றார்கள்
சலனம் கூட்டி.
காத்திருக்கும் நேரத்தில்
விட்டுச் சென்ற வேலைகளை
வேகமாக முடிக்க
வருகின்ற எவரையாவது
கேட்கும் தொகைக்கு
எடுத்துச் சென்றுவிடலாம் தான்
தொடர்ந்து கொட்டும் மழையின்
நடுக்கத்திற்கு.
எங்கள் சகலத்திலும்
சவாரிகள் கடந்து
சலிக்காமல் வழக்கமாக வரும்
அந்த ஆட்டோத் தம்பி
வருவதன் பொருட்டான
காலதாமத அசௌகரியத்திற்கு
காலைக் கடன்களோ
வேறெந்த காரணமுமே
இல்லாமலையே இருக்கட்டும்.
முன்பான நாட்களில்
அற்பத்திற்காக
அவனைக் காக்க வைத்த
அசௌகரியத்தை
அவன் முகம் மலர்ந்தே
அணுகி இருந்தான்
அறமென்பது
ஆட்டோ ஓட்டுநர்களுக்கும்
உண்டெனக் காட்டி.
இந்த ஒண்டி நிற்கும்
சாரலின் நனைதலைவிட
அவன்
அன்பில் வியாபித்தது
வெள்ளக்காடாக
நிறைந்து கிடக்கிறது
கரைகள் தழும்புமாறு
எப்பொழுதும்
காத்திருப்பதில்
சுகம் கண்டு.
- ரவி அல்லது