மரித்துப் போன
மாஞ்சோலைகள் யாவும்
தேயிலைத் தோட்டமானதற்கு
திட்டவட்டமான குறிப்புகளில்லை
திண்டாடிய வாழ்க்கையில்
செவி வழி
செய்திகளைத் தவிர.

சீல் பிடித்த சிரங்கை
பிதுக்கியெடுத்த
பெயர்களைப் பட்டியலிடலாம்தான்
நூற்றாண்டு அவலத்தின்
நுரை தள்ளாதிருந்தால்.

வேதனையின் விசும்பலை
விடுதலையின் போது
விட்டகல முடியவில்லை.
சுவாசிக்கும் காற்றுக்குள்
சுருண்டழிந்தவர்களின்
நேசம் நெஞ்சுக்குள்
நெருஞ்சியாக வளர்வதால்.

மண்ணிற்குள் கிடக்கிறது
மறக்க முடியாத துடிப்புகள்.
துளிர்க்கும் தேயிலையின்
சுவையென காய்ந்தாலும்
எப்பொழுதும் கசந்து.

பொருளாதாயப் போக்கில்
பொசுங்கிய மனிதர்களையும்
பண்டமாகப் பார்த்ததால்.
குத்தகையெனும்
குறுக்கு வழி
ஏடுகளில் ஏறியது
ஆதாய அரசர்களுக்கு
இயங்கியலின் இயல்பென
உற்பத்திப் பெருக்கத்தில்.

சொல்லும் படியாக ஏதுமில்லை.
சொர்க்கமென உங்களுக்கு
ஏற்ற இடம்.
சொடக்கெடுத்த அருவிகளும்
துவட்டிவிட்ட
தூய காற்றையும் தவிர
சோரம் போய்
துவண்டழிந்த வாழ்வில்
எஞ்சி இருக்கும்
உடற்கூட்டின்
உயிரைத் தவிர.

அருவியாகக்
கொட்டி வந்த
ஆற்று நீரில்
ஆர்ப்பரித்து மகிழ்ந்தபொழுது
கைரேகைகள் யாவுமழிந்து
வென்றெடுக்கும்
விதிரேகைகளுக்கான
வேதனை கண்ணீரென
விளங்காது போனது
குற்றமில்லை தான்
உங்களின் கொண்டாட்டத்தில்.

தளர் நடையில் தள்ளாடி
வேரூன்றி விருச்சமாகும்
நம்பிக்கையில்.
நாட்டிற்குள் வருகின்றோம்.
அடிமைகளின்
அவல வாழ்க்கையின்
அடுத்த அத்தியாயம்
புது மணம் வீசும்
பூஞ்சோலையாக மாறுமென.
மலையகம் விட்டு
தாயகத்தை
தழுவுவதற்குத் தயங்கி.

- ரவி அல்லது

பிகு: இரயத்வாரி (ryotwari) பிரிட்டிஷ் அரசாங்க கவர்னர் சர் தாமஸ் மன்றோவால் 1820ல் கொண்டு வரப்பட்டது. இது அரசாங்கம் உழவர்களிடம் நேரடியாக வரியை வசூல் செய்தது. ரயட் என்றால் உழவர் என்று பொருள்.

Pin It