கீற்றில் தேட...

கடைசியாக நதியையும்
தொலைத்த பிறகு
தொலைப்பதற்கு இனி எமக்கு
வேறேதேனுமுண்டோ எதுவுமில்லை
பூலோகநாதனே.
ஊர்க்கூடி தேர் இழுத்து
திருவிழா என
பவிசு காட்டுபவர்கள்தான்
கூட்டாக வன்புணர்ந்து
ஆணவக் கொலையாய்
நதியைக் கொன்று
நதியிலேயே புதைத்து
நதிக்கரையில் நதிக்கு
திதி கொடுத்து
வெயிலை சபிக்கிறோம்.
அன்றாட நிகழ்வில்
ஆற்றைக் கொன்றவர்கள்
ஆணவக் கொலையை
அன்றாடமாய் ஆக்கிய பிறகும்
வழக்கம்போல் உலா வந்து
அமைதியாய் ஆனந்த சயனத்தில்
உறைந்தார் அரங்கன் பாவாய்.

- சதீஷ் குமரன்