திருவிழாவின் கொண்டாட்டப் போக்கு
மாறி இருந்தது
மற்றெப்போவதையும்விட விமர்சையாக.
தகிக்கும் அனலின்
தாகம் தணிக்கும்
ஐஸ் கிரீம் கடைகள்
அதிகம் இருந்தது
சிறார்களைப்போல
பெரியவர்கள் கூட்டமும் நிறைந்தவாறு.
பேன்ஷி கடைகளுடன்
பிற கடைகளும்
டாட்டூ கடைகளுமென
கோவிலின் தோற்றமே மாறி இருந்தது
எலக்ட்ரிக் மணியின்
இடைவிடாத ஓசையோடு.
ஜெயண்ட் வீலிலும்
சர்க்கஸ் கூடாரத்திலும்
ராக் இசை ஒலித்தது
கூடுதல் இரைச்சலாக.
பவளக்கொடி
வள்ளித் திருமண நாடகம்
நடந்த கலையரங்கம்
பட்டி மன்றத்துக்கு
பழகி இருந்தது
பாட்டு மன்றமாக.
பால் குடம்,
பறவைக்காவடி,
செடல் காவடி,
சீரியல் செட்
காவடியென
நேர்த்திக்கடன்
மெய் மறக்க வைத்தது
வீதிகளெங்கும்
வினோத சாமிகளாக.
முறைக்காவடிகளுக்கு
முன் ஆடியவர்கள்
படித்தவர்களாவே தெரிந்தார்கள்
தாளத்திற்கு
ஒழுங்கு காட்டியதால்.
எப்பொழுதும் போல
சாமியாடும்
பலர் திமிறிக் கொண்டு முறைத்தார்கள்
கிராமப் பிள்ளைகளுக்கு
கிலி கொள்ளுமாறு.
சுடிதாரிலும் ஜீனிலும்
இளவட்டங்கள்
நேர் செய்த முடிகளில்
சேர்ந்தெடுத்த
செல்பியில் மகிழ்ந்தார்கள்
விருப்பங்களை அள்ள.
மிதி வண்டி
மாட்டு வண்டியின்
இடங்களில்
காரும் பைக்கும்
கண் கொள்ளாத
காட்சியாக இருந்தது
பொருள் விடுதலைப் பெற்ற
பூரிப்பாக.
யாவற்றுக்கும் இடையில்
சாதிப் பேரவைக்காரர்கள்
நீர் மோர் கொடுத்து
புண்ணியம் தேடினார்கள்
நித்திய சுகம் காண.
இன்னொரு பேரவைக்காரர்கள்
கரைசல் நீர் கொடுத்து
கவனம் ஈர்த்தார்கள்
ஆரோக்கியத்தில்
அக்கறை கொண்டதாக.
மற்றொரு பேரவைக்காரர்கள்
மரக்கன்றுகள் வழங்கும்
மகத்தான பணியையும்
செய்தார்கள்
மழைகள் பெய்து
மானுடம் தழைக்க.
பரிணாமம் கண்ட
திருவிழா படு ஜோராக நடந்தது.
அடிக்கொரு காவலருடன்
அழகென.
காணாமல் போன
சாதியை
கண்டெடுத்துக் கொடுத்த
சாமிக்கு நேர்த்தி கடன்
வைப்பதில்தான்
இப்பொழுது என் நிம்மதி
தொலைந்து போனது
யுகப் பிழையாகுமோவென்ற
அச்சத்தால்.

- ரவி அல்லது

Pin It