ஒரு கனத்த சித்திரத்தை
வரைந்து முடிப்பதற்குள்
எத்தனை எத்தனை
தூரிகைகளாக
உதிர வேண்டி இருக்கிறது
வேடிக்கை பார்க்கிறவன்

*
நாம யார்கிட்ட பேசலாம்
என்பது ஒரு காலம்
யாரு நம்மகிட்ட பேசலாம்
என்பது ஒரு காலம்

*
மானுட விகாரம்
முதலில் மரியாதையைக்
கொல்லும்
பிறகு மெல்ல மெல்ல
ஒரு மயானத்தைச் சொல்லும்

*
கண்களின் ஈரத்தை
இதயத்தின் வலியை
மனதின் வடும்பை
சரி பார்த்துக் கொள்ள
இப்படி ஒருவர்
அவ்வப்போது
மரிக்க வேண்டியிருக்கிறது

*
நிச்சயமாய்த் தெரியும்
கிட்டத்தட்ட
ஒரு மைல் தொலைவு
கானலின் வழியே
உடல் கரைவது போல
வேர்த்து பூத்த சிறு பூத
நிழலாக நீந்தி வந்தேன்
மாயத்தில்
நிகழ்ந்து கொண்டிருந்தது
ஒரு நடை
மாயத்தை நிகழ்த்திக்
கொண்டிருந்தது
இந்த வெயில்

- கவிஜி

Pin It