மழைக்குள் ஒதுங்கும்
மனம் இருக்கும் வரை
குடைக்குள்ளும் மழை தான்

*
வீட்டுக்கு வண்ணமடிப்போர்
மத்தியில்
பூமிக்கு வண்ணமடிக்கும் வான்கா

*
புத்தனை சேர்வதற்கு ஆயிரம் வழி
புத்தனாய் ஆவதற்கு
நீயே வழி

*
குடை மறந்தவன் என்று
சொல்லாதீர்கள்
நான் மழை உணர்ந்தவன்

*
வீடு எல்லாவற்றுக்குமானது
முக்கியமாக
வாசலுக்கானது

*
நிசப்தம் உடைகின்ற போது
எங்கோ ஒரு முத்தம்
சோம்பல் முறிக்கிறது

*
உன்னை பாலை என்கிறாய்
உன்னில் நடந்து திரியும்
வாழ்நாள் ஒட்டகம் நான்

*
வாசல் தேங்கிய நீரில்
வானம் நுழைந்த நாய்க்கு
வாயெல்லாம் நட்சத்திரம்

*
செருப்பு தைப்பவரிடம்
பேரம் பேசுகிறான்
வாய் கிழிந்தவன்

*
நீந்தியது போதும் போ
நிலவை விரட்டுகிறாள்
அதிகாலை குளம் இறங்கியவள்

*
தேநீர் தீர்ந்து விட்டது
தித்திக்கும் கண்கள் தான்
தீர்வேனா என்கிறது

*
நல்ல முன்னேற்றம் தெரிகிறது
இன்னும் சில நரைகள் தான்
அதையும் முத்தமிட்டே கருப்பாக்கு

*
சொந்தப் புள்ளைக்கு சோறூட்ட
தெருப் புள்ளையைக்
காட்டாதீர்கள்

*
கடைசி மாவு
எப்போதும் குளறுபடி தான்
தனக்கு ஒதுக்கிக் கொள்கிறாள் தாய்

*
வலை வீசுகிறவனை விட
தூண்டில்காரன் பயங்கரம்
கவனம் மீன்களே

*
நீ படித்திருந்தால் கூட வெறும் கவிதை தான்
நீ கிழித்து வீசியதால்
இப்போது அதற்கு சிறகு

- கவிஜி

Pin It