அதிகாலை
'அலாரம்' வைத்தெழுந்து 
அவசரமாய்க் குளித்து 
அரைகுறையாய் உடுத்தி 
அடுப்படி வேலை முடித்து 
அருமைச்  செல்வங்களைப்  
பள்ளிக்கனுப்பி 
அலுவலகம் கிளம்பி வந்து ஆசுவாசப்படும்போது தோன்றும் 
'ஏனடா இப்பெண் பிறவி? என! 

மாலை மீண்டும் 
கூடடைகையில்... 
ஓடிவரும் பிள்ளைகளின் 
உடுப்பு மாற்றி-  மதிய 
உணவு உண்டார்களாவென 
ஆய்ந்து பார்த்து 
அவர்கள் சொல்லும் 
அன்றைய கதைகளை 
'ஆவென' வாய்பிளந்து 
கேட்கையில் பிறவிப் பயன்  
பெற்று விட்டதாய்ப்  
பூரிப்படையும் 
பெண்ணுள்ளம் போல் 
பித்துப் பிடித்தது ஏதேனும் 
இருக்கிறதாவென  
எண்ணியெண்ணி
இதழ்க் கடையில் தோன்றும் 
புன்னகைக்கு 
விலையேதும் உண்டோ 
சொல்வீர் 
உலகத்தீரே!? 

- ம.இராதா

Pin It