1.

விதை உதிர்த்த
பறவையொன்று
நிலத்திற்கு தந்து சென்றது
வனத்தின் வாழ்வை...

2.

விளக்குத் திரியை
ஏற்றிய நேரம்
ஏனிந்த பரவசம்
ஏனிந்த கண்ணீர்
சுடர் வாழ்வு
நீயும்
நானும்..
அவ்வளவுதான்
காலத்தின் முன்.

3.

ஊசிமுனைக் கேள்விக்கு
அய்யன்மீர் காலத்தின்
பதில் என்ன?
என்பதில் தான்
கஞ்சிக்குள்
இருக்கும் பசி.

4.

உன்னைச் சந்தித்து பேசினேன்.
உன்னைச் சந்திக்காமல்
சென்றேன்.
உன்னைச் சந்திக்கவில்லை
உன்னைச் சந்தித்தேன்.

5.

புரிந்து விட்டால்
சத்தில்லை என்றவர்கள்
புரியாத தத்துவத்தை
விளங்கா வண்ணம்
வியந்தழிந்த அறிவுஜீவியின் இடறிய
பெருவிரல் ரத்தக் கசிவிற்கு
மண் அள்ளி அப்பிய செயல்
கண்டேன் சாமி...
தொடும் உணர்வு போல் கவிபாட
உள்ளம் ஏகினேன்.

6.

இடப்பட்ட
புறாமுட்டைகளை
கோபுரம் அடைகாக்கிறது

தெய்வச்சிலைகள்
பாதுகாப்பிற்கு 

7.

அடர் இருள்
புதிர் வெளிச்சம்
புத்தியின் கண்ணில்
மனித விரல்
அடைக்குமா?
பெருகும் ஊற்றை,
கவியின் மன இடுக்கில்
நதி மூலம் காண்.

8.

பல் இல்லை
காலம் மென்றுத் தின்று விட்ட ஏப்பத்தில்
சூரிய சந்திர
மண்டலங்கள் சுழன்ற நாட்களின் ஊடே
கைத்தடி ஊன்றி வருகிறாள்
அவ்வை போல்..

9.

மை இருள்
வெளிச்சத்தில்
கரையத் தொடங்கிய
விடியலின்
முன் துவக்கத்தில்
மென்பொருள் நிறுவனத்தில் இருந்து
அறைக்கு உறங்க வரும்
அவளுக்கு வந்த அலைபேசியில்
அப்பாவின் குரலுக்கு இடைதனில்
பசுவின் கழுத்துமணியோடு
பறவைகளின்
ஓசை சிறகசைப்புகளும்
கேட்டது.

10.

மறுத்தாலும்
மறந்தாலும்
நீர் இன்றிப்
போனாலும்
அசையும்
வளரும்
பெருகும்
வளர்க்கும்
உயிர் இருப்பின்...

-  சீனு ராமசாமி 

Pin It