இளகிக் குழைந்த
உழமண்ணின்
நீராடை
சூரியக் காமுகனால்
கிழித்தெறியப்பட்டது.

ஒட்டுத்துணியையும்
மிச்சம் வைக்காமல்
உருவிய மேனியாய்
நேற்றைய குட்டை

கிழித்துப் போட்ட
காகிதமாகக்
கட்டாந்தரையில்
வெடித்த கீறல்கள்

இறுகிய சேற்றின்
வெடிப்புகளுக்குள்ளே
நீரோடிய மீன்களின்
கர்ப்ப விதைகள்

வெள்ளத்தளவில்
சிரித்து முகம் காட்டிய
நீர்ப்பூக்களின்
கல்லறையாய்
நாளைய
உயிர்த்தெழுதலை
எதிர்நோக்கும்
வித்துகள்

வெப்பத்தின் தகிப்பில்
குழைந்த நாட்கள்
மாதங்களாகிட
சூரியச் சுழற்சியில்
மாதங்கள் உருகிப்
பருவங்கள் மாறிட

மேகப்பந்தலில்
கோர்த்து வைத்த
முத்துக்கள்
மழைத்துளியாகிட
சிதறிய துளிகள்
மிதித்துக் களிக்கும்
புழுதிக் களத்தில்
தூற்றிய மணிகளாய்
மழை வாசனை

நாசியில் நுழைந்து
மனதுக்கு இனிக்கும்
மண்வாசனை

- மலையருவி

Pin It