சேர்த்து வைத்திருந்த
கோப சித்திரங்களை
உடைத்துப் போட ஒரு வாய்ப்பு
யாரோ எப்போதோ பேசிய
நீ வா போ வை
திருப்பித் தரும் வடிகால் நேரம்
முறைக்கலாம்
நாக்கை கடித்து முனங்கலாம்
ஒழுங்கு மரியாதையா
போயிட்டே இரு என மிரட்டலாம்
பின் கழுத்துக்கு எகிறும்
மேல் பொத்தான் அவிழ்ந்த சட்டை
நாங்கெல்லாம் என்ற
மயிர் குறியீடு
கால்களில் சக்கரம் முளைத்த
கற்பனையை
ஊருக்கே காட்டும்
ஒரு வெத்து கெத்து
மீசை முறுக்கி தாடி தடவும்
உடல் மொழியில்
நெஞ்சை நிமிர்த்தி ஓர்
உரு போடுதல்
சும்மா கிழக்கு மேற்கு நடந்து
தெற்கு வடக்கு திருகி
எலும்பு தோல் கைகளை
றெக்கை மாதிரி தூக்கி ஒரு பகட்டு
சிவந்த கண்கள் சிலுத்துகிட்டு
இனி சொல்வதெல்லாம்
சொல்லச் சொல்ல மானக்கேடு
வந்து மாட்டிக் கொள்ளும்
வாகனங்களுக்கு வழி செய்வதாக
அதிகாரம் மண்டையில் புரளும்
அரைக்கிறுக்கன்கள்
ஒவ்வொரு ஊர்த் திருவிழாவிலும்

- கவிஜி

Pin It