காவிச் சிறகுகொண்ட காக்கை ஒன்று
கூட்டினைத் துறந்து நாட்டினில் வந்து
கோவில் வருகிற பக்தர் மனதில்
காவிமுட் டைகளை இட்டுச் செல்லுது
சீவிய கொம்புடன் சீறும் காளையின்
சினம்தோன் றுதுபார் இளைஞர் மனதில்!
தீவிர மாய்மத பேத உணர்வு
தழைக்குது பார்அவர் பிஞ்சு மனத்தில்! 

வடக்கில் இருந்து வீசுது பாசிஸ
வெட்கையைச் சுமந்து விஷக்காற் றொன்று
குடற்புண் ணாய்ச்சிறு பான்மை இனத்தினை
குடைந்து குடைந்து கொன்றிடப் பார்க்குது
தொடக்கூ டாதென சனங்கள் சிலரை
தனித்தே வைத்திடத் தவமும் செய்யுது
அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் செய்திட
ஆதி மறைகளைத் தூசு தட்டுது 

தாமரை பூத்திடும் தடாக மாக
தமிழகம் தனையும் மாற்றப் பார்க்குது
பாமரர் தோள்களில் பல்லக்கை வைத்து
பார்ப்பன ரையதில் தூக்கச் செய்யுது
சாமரம் வீசும் சூத்திரர் சிலரை
தலைவர்கள் ஆக்கி உலகை ஏய்க்குது
தேமது ரத்தமிழ் தேய்ந்து செத்திட
சதிகள் பலவும் செய்து வருகுது 

ஆடையைக் கொண்டு அரசியல் செய்து
ஆணா திக்கத்தை நிலைபெறச் செய்து
பாடையில் மனித மாண்பினை எல்லாம்
பட்டென ஏற்றிப் புதைத்திடப் பார்க்குது
சோடை போய்விட்ட இந்துத் துவமதை
தோளில் சுமந்து ஊர்வலம் வருது
மேடைகள் தோறும் பொய்கள்பல பேசி
மக்கள் மனதை மயக்குது இன்று 

அதிகா ரங்கள் குவிந்து கிடக்குது
ஆலயந் தோறும் பிராமண ருக்கு
இதிகா சங்களும் வேதபு ராணமும்
இழிவைப் புனிதம் ஆக்கப் பிறந்தவை
சதிகாரர் கள்அன்று செப்பிய பொய்கள்
சனாதன தர்மமதன் ஆணி வேர்கள்
புதிதாய் நாமோர் உலகு படைத்திட
புதைத்டு வோமிந்தப் பொய்க்குப் பைகளை 

- மனோந்திரா

Pin It