பனிவிழுங்கிய மாலையில்
பணி முடித்த சூரியன்

இரவுக்கு இன்னும்
இரண்டொரு நாழிகை

குளிருக்கு இசைவடையும் குறுக்கு வழி,
கைகள் உறாஞ்சி
கன்னங்கள் ஒத்திக் கொள்கிறேன்

நினைவுக்கெட்டிய நாள்தொட்டு
ஓயாமல் ஓடுமந்த ரேடியோ
இன்றுமதன் குரலில்
ஏதோ பாடிக் கொண்டிருக்கிறது

வரித்தெரியா பாடலுக்கு
புதுபுதிதாய் முனகல் மொழிகள்
எல்லாமே ஏதோவொன்றின்
இல்லாமை மறைக்கத் தானே!

என்னோடு சேர்ந்திசைக்கும்
தூரத்து கருங்காக்கையை
எண்ணம் சிதறாது எட்டிப் பார்க்கிறேன்

முகம்பார்த்து சிரித்துச் செல்கின்றன
பரிட்சயமற்ற முகங்கள்
பதிலுக்குப் பார்த்து சிரிக்கிறேன்
ஒடுக்கி விடவில்லை
இன்னுமுன்னை இவ்வுலகு

முதலில் துரத்தினேன்
கைவீசி சோர்ந்து விட்டேன்
காதுக்குள் குரூர ராகம்
கணக்கு வாத்திக் குரல்
அந்த கொசுவுக்கு

இணையக் காதல் மூன்றுபேர் தற்கொலை!
வடையை நசுக்கி மிஞ்சியதில் தலைப்புச் செய்தி
பக்கத்து இருக்கை சிரிக்கிறது
நானும் சிரிக்கிறேன்

இங்கிதமற்ற இளங்காற்று
மனதின் ரகசியம் உளவுகிறது
ஆறுதல் சொல்லும் அஃறிணை

தொண்டைக்குள் தள்ளிவிட்டு
சிக்கி நிக்கும் வடையடுத்து
ஆற்றியெடுத்தத் தேநீரை
அண்ணாந்து கிடத்துகின்றேன்

ஆஹா!
கடல் கடையாமல் கைமேல் அமிர்தம்
இயற்கையோடு இளையராஜா!
'இது ஒரு பொன் மாலை பொழுது'

- அன்புநாதன் ஹஜன்

Pin It