அடி பெருத்த வேப்பமரத்தில்
ஏறி விளையாடும் அணிலாய்
என்மீது பகல் அணில்
உச்சி முதல் உயிர் வேர் வரைத்
தாவி விளையாடுகிறது.
தற்போது வரை இலைகளாகவே
பச்சையம் தயாரிக்கிறேன்.
வண்ணத்துப் பூச்சிகள் மட்டுமே
வந்து வந்து விசாரித்துச் செல்கின்றன .
கடந்து போகும் வெயிலை
அழைத்து வந்து
என் கனிகளை அறிமுகம் செய்வேன்.
அந்நாளில் என் கிளைகளின்
கூடுகள் பறவைகளின்
பாடலிசைக்கும்
அடையில் அமுங்கிக் கிடந்த
முட்டைகளில் பரிதியின் குஞ்சுகள்
என் பெயரின் முதலெழுத்தைச் சூடிக் கொள்ளும்.
அதுவரை இலைகளாகவே
இருந்து விட்டுப் போகிறேன் .
நீங்கள் சூடிக் கொள்ள
பூக்களாக வேண்டிய
அவசியம் எனக்கில்லை.
எப்போதும் நான்
என் நிலத்தின் அடியுரம் தான்.
அத்துவானக் காட்டுக்குள் நின்றாலும்
தட்பவெப்பம் தாங்கி
உனக்கான உயிர்க்கனி மருந்தோடு
காத்துக் கிடக்கும் வேப்பமரம் நான்.

- சதீஷ் குமரன்

Pin It