கீற்றில் தேட...

எங்கிருந்தும் ஜொலிக்கும் நின் முகத்தில்
சிரிப்புக்கும் ஜீவியத்துக்குமான
பெரும் வரங்கள்
படக்கென ஒவ்வொரு பல்லும்
சிரித்து விடும்
படபடவென நெற்றி மூக்கு கண்களில்
புறாக்கள் விரிந்து விடும்
தேவமங்கை நீ என்கிறேன்
தேன் வண்ண சிந்தனையில்
பெரும்பாறை உருட்டிப் போகும்
பால் வண்ணப் பருவமும்தான்
என்கிறது ஓரப் பார்வை
மெல்லிடையற்ற
வெண்பனி மூட்டை
நாலே முக்கால் அடியில்
பளிங்கினால் நீ ஒரு மாளிகை
பூசின பிம்பத்தில்
65 கிலோ கன வனம்
பின்னிருந்தோ முன்னிருந்தோ
அணைக்கத் தேவை
தினம் ஒரு காலர் டியூன்
இதயம் பேசுகிறாய் இனிமை இதழ்களில்
கன்னம் பூசுகிறாய் கனவு கழுத்தினில்
வளையல் நிரம்பிய
நீல நரம்பு அரும்பிய கிடார் கைகள்
காதோர பூனை முடியில்
மினுமினுக்கிறது கிளி மாஞ்சா சுடர்
அதிகாலை வனத்தில்
குட்டை சந்தன மரம் நீ
புடவைக்கு வாய்த்தவள்
புதிர் சுற்றி பூந்தோட்டம் சாய்த்தவளும்
புன்னைவன பின்வனப்பு
ஜன்னல் உண்டு சங்கீத முதுகில்
ஆலாபனை
மைக் பிடித்து நீ ஹைப் ஏற்றுகையில்
ஆராதனை
நின்றபடியே மேடையில் உன் அபிநயம்
நிகழ்ச்சி முடிவதற்குள்
உன் கரம் பற்றிட கனா கண்டேன்
கண் ஜாடையில் பூச்சூடி நெற்றி முடி ஒதுக்கு
கனவல்ல கண்ணா இது காதோரம் லோலாக்கு
முணுமுணுக்கட்டும் இலக்கியக் கூட்டம்

- கவிஜி