மங்கித் தெளியும் வானம்
தகதக பறவைகள்
காற்றின் திசைகளை
கிழித்து தைக்க
இளமை வற்றி
பழுப்பு நிறம் ஏறிய
கிழம் ஒன்று
கூன் முதுகை
நிமிர்ந்து
வரப்பை மீறும்
வயலில் நீரை
மண் வெட்டித் தள்ளியது.
உருண்டோடும் நீரை
களிமண் பூசிய
கைகள்
அள்ளிப் பார்த்து
ஆகாயத்திடம்
சொன்னது.
‘நன்றி'

 *** 

காதலித்து செத்துப்போ 

வானம் மெல்லச் சிரிக்க
உயிர் நிறைந்த காதல்
உதிரங்கள் சுரக்க
யாருக்கும் தெரியாமல் சிரி.
உண்மைக்கு சவக் குழி எடு
மாறிவிடும் அன்பு
என்றுணர்ந்து காதலி
வானவில் ஆகு
மௌனங்களின் போது
வார்த்தைகள் தேடு
முத்தம் கொடு
பரதேசியாகு
தத்துவம் உளறு
புத்தகம் வாசி
காகிதம் கிறுக்கு
கவிதை என்று சொல்
தாயங்கள் உருட்டு
ஏற்ற இறக்கங்கள் சமாளி
காதலித்து செத்துப்போ
மீண்டும் பிறந்தால்
முதலிலிருந்து காதலி.

- மு.தனஞ்செழியன்

Pin It