நெடுந்தூர பயணத்தில் சாலையோர
பச்சை வண்ண ஹோட்டலில்
தேனீர் அருந்துகிறேன்
பசிக்கிறதா இல்லையா
என்பது பற்றி சொல்வதற்கில்லை
தேவாவின் 90கள் ஸ்பீக்கரில்
கானா வாசிக்கின்றன
நெடுஞ்சாலை இடதும் வலதுமென
றெக்கை கட்டி இருக்கிறது
ஓய்வில்லாத உலகம் செவ்வகம் தான் போல
உலக சக்கரத்தை மீண்டும்
உருட்ட ஆரம்பிக்கும் ஓட்டுநர்
ஒலி எழுப்பி ஓலை அனுப்புகிறார்
ஓடிச் சென்று ஜன்னல் அடைகிறேன்
என்னைப் போலவே
தேநீருக்குப் பிறகு
ஓடோடி வந்து பேருந்தில் ஏறும் யாரோ நீ
இந்த மென் இரவில்
சுடர் ஏந்தியது போல
மனச்சூட்டில் ஏனோ இனி
தூக்கம் வரலாம் எனக்கு
தூக்கம் வராத
அந்த சிற்றூர் சாலைவாசிக்கு
சித்திரம் நகர்வதாகப் படலாம்
இனி இந்த பேருந்து...!

- கவிஜி

Pin It