இருண்டு கிடக்கும்
இந்த நீண்ட இருளிற்கு
இரவென்று பெயர் வைத்தவர்
யாரென்று தெரியவில்லை

அடுக்கி வைக்கப்பட்டு
நெடுநாளிற்குப் பிறகானதொரு
அந்தியில் தான்
நிகழ்ந்தது அவ்வதிசயம்

குறுக்கும் நெருக்கமுமாக
நெட்டை குட்டையுமாக
படுத்தல் நின்றல் நீட்டலுமாக
தவம்புரிந்தவர்களின்
தவமே
தன் தவத்தினை யாரேனும்
கலைப்பார்களா என்பதாகத்தான் இருந்தது,

முண்டியடிக்கப்பட்டு
சாவின் கடைவாயிலில் நின்றவொருவனின்
மரணமொன்றை
காதல்வயப்பட்டு வருடி
கூடிக்களித்த தருணம்
அனுபவி அனுபவி என்பதாக
அருகே வந்தமர்வதற்குள்
எங்கிருந்தோ
கிடுகிடுவென வந்தது
அவ்வதிசய வெண்ணிற இரவு

தனிமையைப் பற்றி
பேசித் திரிந்து
தனிமையைவே பற்றித்திரிந்த
காலமதில் தான்
வந்தமர்ந்தான் அப்புண்ணியவான்
தஸ்தவெஸ்கியென
அறிமுகம் செய்துகொண்டு

கைகளில் வைத்திருக்கும் எதுவும்
எனக்கெதிராக திரும்பக்கூடும்
என்னை யாரும்
ஏசிவிட வேண்டாம்
யாரும் காரி
உமிழ்ந்துவிட வேண்டாம்

இதைப் படிக்கும் பொழுது
உங்கள் அருகிலுள்ள
சாலையில் ஒரு அமர்வு இருந்ததெனில்
அது நாங்களிருவரும்
அமர்ந்து கதைத்த இடமாகத்தான்
இருக்கக்கூடும்.

கதைத்ததில்
காதல்
தனிமையைப் பிய்த்தெறிந்து
எலும்பின் மஜ்ஜைகளிலும்
குருதியோட்டத்தின் வேகத்தை விட
ஊடுருவத் தொடங்கியது

மூன்று இரவும் ஒரு பகலுமாக
இப்படியாக
கதைக்கப்பட்ட கதையாடல்
முடிவில்
கண்கள் திறந்தேன்

மனிதனேயல்லாத அத்தேவகுமாரன்
காணாத தூரத்தில்
நடந்து கொண்டிருந்தான்

என் கைகளை
இறுகப் பற்றியிருந்தது
அவள் கரம்,

அவள்
தன்னை நாஸ்தென்கா என
அறிமுகம் செய்துகொண்டாள்...

- கருவை ந.ஸ்டாலின்

Pin It