ஐந்து வயதில்
என் விருப்பம்
இல்லாமல்
அந்த சலூன் காரனிடம்
கண்ணடித்து
அப்பா வெட்ட சொன்ன
ஹேர்ஸ்டைலுக்கு
கிராப் என்பது பெயர்

இருபத்தி ஐந்து வயதில்
அப்பா விருப்பம் இல்லாமல்
நான் வெட்டி வந்த அதே
ஹேர்ஸ்டைலுக்கு
ஆண் பிள்ளை என்று பெயர்

மயிரை மட்டும் வைத்து
மரபியலின் தந்தை
ஆனார் அப்பா

பதம் பார்த்தன
இவை மூன்றும்
என் பிஞ்சு தேகத்தை

தாத்தாவின் பிரம்புகள்
நீளமானவை
அப்பாவின் பெல்டுகள்
கனமானவை
அம்மாவின் தோசைகரண்டி
சூடானவை

அன்று தான் தெரிந்தது
மயிர்களில்
பெண்ணியம் மடலேறுவதை

நீள மயிர் எதை கூறுகிறது
மயிரின் நீளத்தில் தான்
பெண்ணியத்தின் அளவீடுகள் நிகழ்கிறதா
அப்பகுதி வரை ஆடும்
மயிரில் ஒன்றை பிடிங்கி
தூக்கிலிட்டுக் கொள்ளுங்கள்

கிராப் வெட்டிய பெண்கள்
நல்லவர்கள்
சாலையில் எங்கினும் தென்பட்டால்
கொஞ்சம் ரசித்துக்
கொள்ளுங்கள்

ஏதேனும் ஓர் கேன்சர் தோழி
கண்ணாடி பார்க்க
காரணமாக இருக்கலாம் இவள்

- கோ.பிரியதர்ஷினி

Pin It