தினமும்
கொலை செய்வதற்காகவே
எழுகிறேன்

ஆயத்தமாவதற்குள்
தேநீரைக் கொண்டுவந்து
வைத்து விடுகிறாள்

மழுங்கிக் கிடக்கும்
ஒவ்வொன்றையும்
பளிச்சிடச் செய்கிறேன்
பட்டைத்தீட்டலில்,

தரம் பிரிக்கப்பட்ட உணவுக்குவியல்களில்
மென்நஞ்சினை
மொழுகிக் கொள்கிறேன்

முளிதயிர் பிசைந்த
அந்த
காந்தள் மெல் விரலைத்தான்
தேடிக் கொண்டிருக்கிறேன்

இங்குதான்
இந்த தெரு முக்கில்
இந்த வீட்டின் வாசலிலே
நின்று நின்று

எத்தனைப் பட்சிகள்
எத்தனை கீச்சரவம்
வண்ணம் பருகத் தொடங்கிய
விழிகள்

புதிதாய்
பிறக்க வைத்த அந்த
காந்தள் மெல் விரலைத்தான்
தேடிக் கொண்டிருக்கிறேன்

இறுகப் பற்றி
அதீத ப்ரியங்களை வெளிப்படுத்த
அதற்குள்
வலதுகரத்தில்
வந்தமர்ந்து பறக்கிறது
கரிச்சான்குருவி

அதன் இறகில்
இருக்கிறது
சுதந்திரம்.

- கருவை ந.ஸ்டாலின்

Pin It