பசித்தவன் ரொட்டித் துண்டுக்காக
வேண்டிக் கொள்ளும் அதே வேளையில்
அவனது ரொட்டித் துண்டுகளைத்
திருடியவன்
தன் பொக்கிஷங்களைக் காவல் காக்க
இறைவனை வேண்டுகிறான்

தன்னிடம் இருப்பதை
தானம் கொடுக்க மறுப்பவனுக்கு
பூட்டு தயாரிக்கவும்
அதை உடைக்க
நினைக்கும் திருடனுக்கு
சாவி தயாரிக்கவும்
கடவுள் நிர்ப்பந்திக்கப் படுகிறார்

குற்றங்களால் நிரம்பியவர்கள்
கோயில் கட்டும்போது
கடவுள்
ஆலயங்களை விட்டு வெளியேறி
நடைபாதையில்
தங்கி விடுகின்றார்

கடவுளுக்கு
ஆதரவாக வாதிடும் இடைத்தரகர்கள்
எப்போதும் கயவர்களாய் இருப்பதை
கடவுளால்
கடந்து செல்ல இயலவில்லை

பாவ யோனியில்
பிறந்தது தான்
எல்லா பாவங்களுக்கும்
காரணம் என்று
சில மூடர்கள் பிரசங்கம் செய்யும் போது
கடவுள்
தாய்மையைப் படைத்ததற்காக தலைகுனிகிறார்

பெரும்பான்மைவாதத்தின் பெயரால்
நம்பிக்கைகள் யாவும்
அதிகார மையமாக
மாற்றப்படும் போது
கடவுள்
விற்பனைப் பொருளாக
மாற்றப்படுகிறார்

மனிதச் சந்தையில்
விற்காதப் பொருளாக
நீதி நேர்மை உண்மை யாவும்
கைவிடப்படும் போது
கடவுள்
திகைத்துப் போகிறார்

போர்களை
உற்பத்தி செய்யும்
ஆயுத வியாபாரிகளை
ஆசீர்வதிக்கும்
அதே வேளையில்
போர்களினால் விதவையாக்கப்பட்ட
பெண்களையும்
அனாதையாக்கப்பட்ட
குழந்தைகளைத் தேற்றவும்
அலைக்கழிக்கப் படுகிறார்

கொள்ளை நோயின் வழியாக
காட்சி தரும் கடவுள்
ஆளத் தெரியாத ஒரு கோமாளி
ஆட்சியாளன் ஆனது போல்
சபிக்கப்படுகிறார்

உண்மை பேசுபவன் எல்லாம் நாத்திகன் என்றும்
உளறித் திரிபவன் எல்லாம் ஆத்திகன் என்றும்
உலகம் சொல்வதை
கடவுளால் ஒப்புக்கொள்ள இயலவில்லை

மதக்கலவரங்கள் நிகழும் போது
முதல் குற்றவாளியாக தேடப்படும் கடவுள்
தலைமறைவு வாழ்க்கைக்குள்
தங்கி அரூபமாகி விட்டார்

பக்திப் பரவசத்தில்
திளைக்கும் பக்தர்களுக்குப் புரிவது இல்லை
கடவுளுக்கு
மட்டுமே புரிகிறது
கடவுளாய் வாழ்வதன் கஷ்டங்கள்

- அமீர் அப்பாஸ்

Pin It