மக்கள் நடமாட்டமுள்ள வீதியது
ஈசலைப் போல் எந்நேரமும் கூட்டம் களைகட்டும்
காய்கறிகள் விற்போரும்
காலாற நடப்போருக்குமிடையே
பசியாலும் உடல் நலிவினாலும் கேட்பாரின்றி
கழிவுகளில் உருண்டு புரண்டு
ஆடையற்ற மேனியில்
சோர்ந்து கிடந்தாள் யுவதியொருத்தி
அருகில் நாயொன்றும் வாலாட்டியபடியிருந்தது
நாகரீகத்தை உடையாய் அணிந்து சென்றவர்கள்
அவளின் நிலையைக் கருத்தில் கொள்ளவில்லை
எட்டடி தூரத்தில் ஒளிந்து நின்றவன்
முழங்கால்வரை ஒழுக விட்டுக் கொண்டே
கூச்சமின்றி நெருங்கி அவளின்
அங்கங்களைத் தடவியிழுத்தான்
தலையை சொறிந்தபடி நரகலை எடுத்து
அவனது முகத்தில் வீசினாள் சிரித்துக் கொண்டே
சந்தேகத்தின் சலசலப்பில்
நாயும் படாரெனத் தாவி
அவனை கடித்துக் குதறியது
தலைதெறிக்க விழுந்து எழுந்து ஓடினான்
அந்த இடம் பேரமைதி பூண்டது
கை கால்களுடன் கடந்து போனவர்கள்
வியந்து பார்த்தார்கள்
வழக்கம்போல் ஆடையற்ற மேனியோடு
கொஞ்சி விளையாடிய நாயையும் அவளையும்

- வழக்கறிஞர் நீதிமலர், மதுரை

Pin It