என்
தனிமை
ஆயுள் நிறைந்தது

அன்றாடம்
அதன் ஆயுளை
நீட்டிக்கிறேன்...

காரணம்
அது தான்
யாரும் அறியா ஆழத்துக்கு
என்னை
அழைத்துச் செல்கிறது

என்
தனிமை
சில நேரம்
நினைவுக்கூட்டத்தின்
நெரிசலில்
சிக்கித் தவிக்கும்...

நினைவுகள் மோதி
விபத்தும் நேரும்...
தனிமைக்கு
முதலுதவி செய்ய
மூளை ஓடிவரும்...

அதற்குள்
எங்கிருந்தோ வரும்
ஒற்றைத் தென்றலின்
தீண்டலில் குணமாகி
திரும்பி விடும்
என் தனிமை...

என் தனிமையில்
காகிதச் சிறகின்
படபடக்கும் ஓசையில்
பறவையாகிப் பறக்கிறேன்...

அந்த
புத்தக உலகில்
புத்தாக்கம் பெறுகிறேன்...

அங்கு
கதைகளில் நானே
கதாநாயகி

கவிதைகளில் நானே
கருப்பொருள்

வில்லியாக இருக்கவும்
விருப்பம் வரும்
சில நேரம்...

என்
தனிமையில்
பூக்களின் புன்னகையைப்
புரிந்து கொண்டேன்..

செடிகளின்
சுவாசத்தைத் தெரிந்து கொண்டேன்..

பறவையின்
பாடலில்
மயக்கம் கொண்டேன்

இங்கு
வார்த்தையின்றி
உரையாடி
எழுத்துகளை விழுங்கி
ஏப்பம் விட்டேன்....

என் தனிமை
மிகவும்
சப்தமானது
திருவிழாவைப் போல...

அதில்
தொலைந்து போன
நினைவுகள்
கிடைப்பதும் உண்டு

கிடைத்த நினைவுகள்
தொலைவதும் உண்டு

என்றும்
சப்தம் மட்டும்
நிற்காமல் கேட்டுக் கொண்டே இருக்கும்...

அதில்
இரைச்சலும் உண்டு
இசையும் உண்டு...

இரண்டையும்
பிரித்தறிந்து
இரண்டுக்குமிடையில்
ஆடுகிறது
என்
மன ஊஞ்சல்...
மகிழ்ச்சியாக....

- இளந்தமிழ் இளவரசி

Pin It