அவள் மார்பில் சுரக்கும் தண்ணீரில்
நீண்ட நெடியதொரு பயணம்
நதியைக் கிளறும் மீன்களுக்கு
இறுதி வரை தூண்டில் இழுவையின்
பலத்தை அடைகாத்து வைத்திருக்கிறது
ஒரு கணம் நீர்
கடைசித் துகளின் விருப்பத்தில்
சிக்கித் தவிக்கும் மீனுக்கு
எப்படி புரிய வைப்பேன்
இது விபத்து இல்லை என்று
அமைதித் துகள்களை
நீர் அறைகளிலும் கேட்கிறது மீன்
அறை ஒன்றைத் தேடாத பறவையாய்
அலைகிறது மீன்
எப்படியும் கிடைக்கப் போவதில்லை
என முடிவாயிற்று
இரை என்ற சொல்லுக்கு
தூண்டில் எனத் தெரிவதில்லை
மீன்களுக்கு
நீர்த்துகளைக் கிழித்து
உணவை இழுத்து உணவாகிறது
இரைப்பை என்ற அறையிலிருந்து
மௌனங்களைக் காத்து நிற்கிறது
எங்கு அறைகளைப் பூட்டி வைத்தாலும்
திறக்கவே செய்கிறது கைகள்
பூமி முழுவதும் கட்டியுள்ள
அறைகளுக்கு கதவொன்று இருக்கிறது
அதிலிருந்து பறவைகள் பறக்கவே செய்கிறது
பூமிக்குத் தூண்டிலிடும்
யாரோ ஒருவனை பார்த்து புன்னகைத்து
அணைத்துக் கொள்கிறாள் அவள்
அதற்கு படிமம் என்று பெயரிட்டு
நகர்கிறாள் அவள்.

- ப.தனஞ்ஜெயன்

Pin It