கருவறையை விட்டு
பூமிக்கு வந்து
சுயமாக சுவாசிக்கும்
குழந்தையின்
அனிச்சை செயல் போன்றது
காதல்

விதைத்துவிட்ட மண்ணில்
காதலால்
வேர்களாகிக் கொண்டிருக்கிறாள்
அவள்

காதலர்களைத் தூவிய இடத்தில்
மூச்சு முட்டிக் கொண்டிருக்கும் நிலம்
பூக்களைப் பூக்கச் செய்கிறது
தண்ணீரும் நிலமும்
மாறி மாறி புணர்ந்து கிடப்பதில்
வெட்கப்பட்டு வெளியேறினாள்

அருவிகளில் நீர்ச்சுனைகளில்
அடர்ந்த காடுகளின்
சிறிய இடைவெளிகளில்
நிரம்பி வழிகிறது காமம்

முத்தும் மணியும்
அலையாடிக் கிடக்கும் கடல்
காதலின் சாட்சி
மலைகளும் கம்பீரக் காட்சி

வார்த்தைகளற்ற பொழுதுகளில்
ஆதரவாகப் பற்றும்
கைகளில்
வசப்படுகிறது காதல்

சப்தங்களிலிருந்து மௌனத்திற்கு
திரும்பும் வேளைகளில்
பிரபஞ்சம் தன்னை
புதுப்பித்துக் கொள்கிறது

- முனைவர் சி.ஆர்.மஞ்சுளா

Pin It