1. கிருமிப்பாட்டு

பள்ளிக் கூடம் திறக்கலே
பாடங்களும் நடக்கலே
வீட்டை விட்டு வெளியிலே
வேலைக் காரும் போகலே
கிருமி ஒன்னு சுத்துதாம்
இருமினாலே தொத்துதாம்
அலங்கு எனும் நாலடி
விலங்கு மூலம் வந்ததாம்
தொட்டுப் பிடித்து பேசினால்
கெட்ட கிருமி பரவிடும்
கையை காலை கழுவினால்
எட்ட அதுவும் ஓடிடும்
தடுக்க ஊசி இல்லையே
கொடுக்க மருந்து மில்லையே
சுத்தமாக இருப்பதால்
தொத்துக் கிருமி குறையுமே! 

2. குட்டிக்கரணம்

கோடையிலே பிள்ளைகாள்
கூட்டமாக வாருங்கள்
குட்டிக்கரணம் போடலாம்
கும்மாளம் அடிக்கலாம்
பஞ்சணையை எடுக்கணும்
பைய தலையை வைக்கணும்
பாதங்களை உந்தணும்
பாதிவட்டம் அடிக்கணும்
குட்டிக்கரணம் போடவே
கூட்டம் சேர்க்க வேணுமே
கையைத் தட்டும் சத்தமே
கரணம் போட வைக்குமே

3. காண்டா மிருகம்

மிருகக் காட்சி சாலையிலே
ஈர்க்கும் மிருகம் பலவுண்டு
சுட்டித் தம்பி நிமலனுக்கோ
குட்டி சிறுத்தை மேலொருகண்
ஆசை அம்மா விரும்புவதோ
ஆமையும் முயலும் மானினமும்
எனக்குப் பிடித்தது வரிக்குதிரை
தனித்தே என்றும் இருக்காது
அப்பாவுக்குப் பிடித்ததுவோ
ஒத்தைக் கொம்புடன் ஒருமிருகம்
-----------------------------------------------
காண்டா மிருகம் ஏனப்பா
கவர்ந்தே இழுக்குது உங்களையும்?
என்னைப் போலே இருப்பதனால்
எனக்கும் அதனை பிடிக்குதடா
காண்டா மிருகம் தனித்திருக்கும்
பானை போலே பெருத்திருக்கும்
பலமணி நேரம் படுத்திருக்கும்
அல்லல் வந்தால் பொறுத்திருக்கும்
இழைதளை மட்டும் தின்னாலும்
இளைக்கவே முடியா பிராணியடா
என்னைப் போலே இருப்பதனால்
எனக்கும் அதனை பிடிக்குதடா!
--------------------------------------------------
விலங்கை எல்லாம் பார்த்துவிட்டு
வீட்டுக் குள்ளே வந்தவுடன்
நீட்டிப் படுத்தான் என்தம்பி
நித்திரை கொண்டான் சட்டெனவே
நித்திரை கொண்ட வேளையிலே
விசித்திர கனவு கண்டிட்டான்
--------------------------------------------------
அப்பா வுக்கு வீட்டினிலே
அலுவல் அறையென ஒன்றுண்டு
அங்கே இருந்த மேசையிலே
அமர்ந்தே இருந்தது ஓருருவம்
காக்கிக் கலரில் கால்சட்டை
கையுறை ஒன்றும் கைகளிலே
ஒத்தைக் கொம்பின் ஓரத்தில்
வித்தைக்காரன் கண்ணாடி!
அப்பா வுடைய கணிப்பொறியை
அண்ணாந்தே அது பார்த்திருக்க
உறங்கும் போதே சிரித்தானே
உரக்கக் கனவைச் சொன்னானே!
காண்டா மிருகக் கதைக்கேட்டு
காலையில் சிரித்தோம் எல்லோரும்
-----------------------------------------------
பின்னால் எழுந்த தம்பியிடம்
அப்பா கேட்டார் ஒருகேள்வி
அலுவல் செய்யும் அறைபுகுந்தும்
கருமம் எதையும் முடிக்காமல்
காண்டா மிருக விருந்தாளி
ஏன்டா போனது வெளியேறி?
காட்டைப் போலே இல்லாமல்
வீட்டில் வேலைகள் பலவுண்டு!
அம்மா வுக்கு உதவாமல்
சும்மா போனது ஏனப்பா?
காண்டா மிருகக் குட்டியிடம்
மீண்டும் வந்தால் கேளப்பா.
----------------------------------------------
காலை எழுந்தால் உடனடியாய்
காப்பி கலப்பாள் என்னம்மா
காப்பித் தண்ணீர் இல்லாமால்
காலை வேலைகள் ஓடாது
அன்றும் அதுபோல் மறுபடியும்
சென்றாள் எங்கள் அடுக்களையுள்
அடுப்புப் புடையில் பார்த்தாலோ
மிடுக்காய் இருந்தது ஒருகுவளை!
அப்பா செய்த காப்பியென
தப்பாய் நினைத்த அம்மாவும்
எடுத்தார் குடித்தார் ஒருமிடக்கு
ஓட்டம் பிடித்தார் மடுவுக்கு
துப்பிய சத்தம் கேட்டதனால்
துள்ளி எழுந்தார் அப்பாவும்
புல்லை வெட்டி காப்பிக்குள்
போட்டது இங்கே யாரப்பா?
கல்லும் மண்ணும் கரைசல்களும்
காப்பித் தண்ணி ஆகிடுமோ?
அடுப்புப் புடையின் தரையினிலே
எடுப்பாய் தெரிந்தது சுவடொன்று
பருத்த ஒற்றை விரல்தடமும்
பக்கவாட்டில் இரு நகமும்
உற்றுப் பார்த்து சிரித்தேனே
குற்ற வாளியைத் தெளிந்தேனே
அம்மா வுக்கு உதவாமல்
சும்மா போக மனமின்றி
காண்டா மிருக விருந்தாளி
காபியை தந்த பண்பாளி!
காட்டில் செய்த காப்பியென
கண்டு பிடித்தோம் நாங்களுமே!
காண்டா மிருகக் காப்பியிது
குடிக்க வாங்க நீங்களுமே!

- லேனா பழ

Pin It