நாளைக்காக
கொஞ்சம் காசு சேர்க்கிறார்கள்
கொஞ்சம் பணம் சேர்க்கிறார்கள்
கொஞ்சம் உறவு சேர்க்கிறார்கள்
நான் நாளைக்காக கொஞ்சம்
நாளையையே சேர்க்கிறேன்

*
முது மனிதனைப் பின் தொடரும்
என் கால்களில் வேர்கள் இருக்கின்றன
உடல் கொண்ட காட்டில்
உள்ளும் புறமும் ஒரு விலங்கும்

*
செருப்பணியாத தேவதைகள் மத்தியில்
செருப்பணிந்த ஒரே ஒரு மனுஷி
தூக்கிட்டு தொங்குகிறாள்
கணுக்காலுக்கு கீழே வெட்டத் தான் முடிந்திருந்தது
கால்களிலிருந்து செருப்பு அவிழவில்லை
அத்தனை பிடிவாதம் விடுதலையில்

*
முக்திக்கு சில நொடிகள் முன்
தாயின் முலையும்
மனைவியின் யோனியும்
பிச்சை கேட்கும் புகை வடிவத்தில்

திடுக்கிட்ட புத்தனுக்கு
காற்றைத் திறப்பது சுலபம்
கண்கள் திறப்பது தான் கடினம்

*

மூன்றாம் நாள் தாத்தா குழி மேட்டில்
அவசர அவசரமாகத் தோண்டி எடுத்தேன்
எல்லாரும் நல்லா இருக்கணும் என்று
அடிக்கடி அவர் சொல்லும் சொற்களை

*
ஓராயிரம் நுண்ணுயிரி
உயிரோடும் உயிரற்றும்
கிடக்கும் திராட்சை ரசம்
கடவுளின் பானம் என்கிறார்கள்
மனமுருக குடிக்கட்டும் சாத்தான்கள்

*
எப்போதாவதும் பற்கள் தெரிய சிரிக்கையில்
எப்போதாவது ஆக்கும் வெள்ளரசி சோற்றில்
கரண்ட் இல்லாத அந்த குடிசை வீட்டு
பின்னிரவு ஒளிரும்

*

கருணைப் பார்வை
கர்ணகொடூரப் பார்வை
விட்டேத்திப் பார்வை
விதியேங்கிற பார்வை 

கண்கள் நிலை குத்தியிருக்கும்
ஆட்டுத் தலைக்கு
கறி வாங்கிச் செல்லும் வரை
வந்தவர் பார்வை

*

முன்னொரு காலத்தின் ஒற்றை சாட்சி
புளிய மர பாங்கிழவி
இப்போதெல்லாம் பேசுவதில்லை
உற்றுப் பார்க்கிறாள்
ஊருக்கு புது சாமி கிடைச்ச மாதிரி

*

விரட்டினால் பறந்து விடும்
அழைத்தால் பறந்து வரும்
வஞ்சமில்லா காக்கைக்கு
வாழ்நாளெல்லாம் பஞ்சம்

*

பால்வெளியில் ஒரு யாசகனைப் போல
கிடக்கிறேன்
நான்வெளியில் யாராவது நம்புங்கள்
அது நீங்கள் தானென்று

*

சாவதற்கு முன் பாட்டி
கழற்றிக் கொடுத்த மூக்குத்தியை
பெட்டிக்குள் வைக்க முடியவில்லை
அவள் புகைப்படம் முன் கட்டி
தொங்க விட்டேன்

அன்றிலிருந்து வீட்டுக்குள் நட்சத்திரம்
பூக்க ஆரம்பித்திருந்தது 

*

அலமாரியிலிருந்து சரிந்து விழும்
புத்தகங்களுக்குள் இருந்து
மயிலிறகு ஒன்று
உன் சிறுவயது நிர்வாணப் படமொன்று
பிறகு
என் பின்னால் நிற்கும் உனது வெட்கமொன்று

- கவிஜி

Pin It