கனவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பூமி இருக்கிறது
அங்கே நெரிசல்களுடன் பேருந்துகள் இயங்குகின்றன
காய்கறிகள் கொள்ளை லாபத்தில் கை மாறுகின்றன
கருத்துப் புழுக்கள் கண்ணோரம் காதோரம் நெளிய
புரளி பொய்கள் கண்ணாமூச்சி காட்டுப்பூச்சி ஆடும்
அறிவுரைகள் இலவசம் அனுபவங்கள் பிண வசம்
கண்ணுக்கெட்டும் தூரம் வரைக்கும்
வார்த்தைகளற்ற வெற்றுடல்கள்
இரை தேடும் இரையாய் பிணி தேடும் பிணியாய்
எதைத் தேடும் மனமோ இதுதான் பூமி பந்தின் கனமோ
தூரம் அருகாமையை செய்கிறது
அருகாமை தூரம் செய்கிறது
சரிக்கும் தவறுக்கும் இடைவெளி மறந்தபோது
தனக்கும் தனக்குமான இடைவேளை தேடுகிறோம்
கூட்ட நடுவே அழுகுரல் ஒன்று
அது எனதாகவும் இருக்கிறது உனதாகவும் இருக்கிறது
அழ முடிவெடுத்த பிறகு யார் அழுதால் என்ன
கண்ணீர் வந்தால் சரி...!

- யுத்தன்

Pin It