இரவைக் கிழிக்கும்
நித்திரையின் மடியில்
நான் பேசிக் கொண்டிருந்தேன்
அன்பாகவே வாழ்ந்தான்
என்பதற்காக
சிலுவையில் வாழ்ந்த
மனிதன் என்னையும்
சிலுவைக்கு அழைத்தான்
அவன் தோள் மீது
எந்த சுமையையும்
செலுத்த விரும்பாமல்
சிலுவையை விடுவித்தேன்.
அன்பாகவே வழியும் குருதி
ஈரங்களைத் துடைத்து அணைத்தேன்
அவன் புண்கள் மனிதப் பற்களால்
கடித்திருப்பதால் வருந்தினான்
அவன் சிலுவையில் இருந்து
இன்னும் விடுதலை செய்யாமல்
இருப்பதைப் பற்றிய கவலை எவரிடமும் இல்லையென்றான்
சிலுவையை
உடைத்தெறிந்து விடுங்கள்
என்றேன்
வருத்தமாக
அடையாளத்துடன்
இருந்தால்தான்
என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்றான்
என் மேசையில்
நாங்கள் மூவரும்
தேனீரை பறிமாறிக் கொண்டோம்
எங்களோடு அமர்ந்த சாத்தானிடம்
கடவுள் சார்பாக மன்னிப்பு கேட்டு
கடக்க முற்பட்டான் சிலுவைக்காரன்.
அவன் குடித்து வைத்த
பாத்திரமும் இன்னும்
ரத்தக்கறையுடன் அப்படியே இருந்தது.
கறைபடிந்த கைகளுக்கிடையே
அவன் மாட்டிக் கொண்டதாக சொல்லி
மீண்டும் சிலுவையை ஆணியால் குத்திக் கொண்டு
தேவலாயம் சென்றான்.
பொழுது புலர்ந்து
இரவை சூரியன் சுமந்தது.
- ப.தனஞ்ஜெயன்