தடம் பதித்து செல்வது வந்ததற்கான சுவடு
வந்த தடம் தெரியாமல் சென்று விடுவது
வந்த காரியத்துக்கான சுவடு

*

வாங்கியவனுக்கு அறிவு
விற்றவனுக்கு சோறு
புத்தக முரண்

*
கூறு போட்டும் கூவிக் கூவியும்
வாரச் சந்தையும்
அதை ஒட்டி நடக்கும்
புத்தகச் சந்தையும்

*
எதைத் தேடிக் கொண்டிருக்கிறாயோ
அது தொலைந்து கொண்டும்
இருக்கலாம்

*
புத்த சிலையை விற்றவனுக்கு
மதியப் பசி தீர்ந்தது
வாங்கியவனுக்கு மானுடப் பசி

*
எறும்பாய் ஊர்கிறேன்
மிதித்து விட ஆயிரம் கால்கள்
முத்தமிட உன் வாசல் கோலம்

*
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியிலும்
கவிதை எழுதுகிறான்
கவிதைக்கு செத்தவன்

*
பகலில் ரகசியம் சுமந்தலையும் பூனை
ராத்திரியில்
விடுதலை சுமந்தலைகிறது

*
என்னைப் போலவே எழுதுகிறாய்
எழுதிச் சாவு
என்னைப் போலவே

- கவிஜி

Pin It