எல்லாவற்றையும்
மறைத்துக் கொண்டிருக்கும்
எவை எவைக்கோ மழை பிடித்திருக்கும்

விரக்தியுற்ற பெருமழைக்குள்
வன்புணர்வு பொருட்டல்ல
போதைகள் விரட்டிச் செல்லும்

இரவு தாண்டும் தாழ்வெளியில்
நம்பும்படி சில அழுகைச் சத்தம்
ஆடை கிழித்தல் இடையிடையே

புதிரென நகர்ந்து தவழ்ந்து மூச்சுமுட்ட
வாய் திறக்கும் சிறுமிக்கு
கைவிடப்பட்ட கைகள் வேறோர் பக்கம்

கண் மறைக்கும் காளி கைகளை
கண்மூடி எவன் செய்தது
பெருந்தூக்கம் அவைகளுக்கு

காற்றும் சேர்ந்து கட்டவிழ்ந்த நேர் எதிரே
குறுக்கு நெடுக்கு கொலைத்துளிகள்
கொன்று தீர்க்கையில் கோபுரம் அசைந்திருக்கும்

மறுநாள் மடியேந்தி நீதி கேட்க
சிற்றுடல் உதவாது என்கையில்
பதாகையில் பாத்திரமறிந்த பதைபதைப்பு

நன்றும் தீதும் சரிசமம் கலந்திருக்க
சாமியும் சாத்தானும் மத்தியமாய் நின்றிருக்க
மாண்டு விட்ட சமூகம் மயானம் நோக்கி... 

- கவிஜி

Pin It